குழந்தையை ஒரு பெண் ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தது தொடர்பாக விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குழந்தை விற்பனை, நாடு முழுவதும் ஒரு சவாலான பிரச்னை!
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண், பிறந்து நான்கே நாளான தனது குழந்தையை தமிழ்நாட்டின் கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்றதாக சமீபத்தில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இவ்விவகாரத்தை தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரிக்க தொடங்கியுள்ளது. இந்த செய்தி தொடர்பாகவும், இதற்கு முன்னர் இதுபோல் நிகழ்ந்த இதர சம்பவங்கள் தொடர்பாகவும் விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசின் தலைமை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., கேரள அரசின் தலைமை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., மற்றும் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தின் செயலாளர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக ஆறு வாரங்களுக்குள் பதில் அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அரசு இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து, தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு பதில் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.