13 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில், தொலைக்காட்சி நிருபரை வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம் கைது செய்தது.
பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரனை நடத்தியதில் சிறுமியின் உறவினர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், போலீஸ் காவலில் இவர்களிடம் நடந்த விசாரணையின் போது, இன்ஸ்பெக்டர், பா.ஜ.க பிரமுகர், பாலியல் தரகர்கள் உள்ளிட்ட 15 பேரை காவல்துறை கைது செய்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது தனியார் தொலைக்காட்சி சேனல் செய்தியாளர் ஜி. வினோபா என்பவரை காவல்துறை கைது செய்துள்ளது.
"வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் வண்ணார்பேட்டையை சேர்ந்த மதன்குமார், அவருடைய தங்கை சந்தியா ஆகியோருடன் வினோபா நெருக்கம் கொண்டிருந்தார் எனவும், வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார் எனவும் காவல் துறை தெரிவித்தது.
இந்த நெருக்கத்தின் மூலம், வினோபா சிறுமியை மூன்று முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பா.ஜ.க பிரமுகர் அலுவலகத்திற்குள் பாலியல் குற்றங்கள் நடந்தேறியுள்ளது. வினோபாவை பாதிக்கப்பட்ட சிறுமி நன்கு அடையாளம் காட்டுகிறார்,”என்று காவல்துறை தெரிவித்தது.
வியாசர்பாடியில் உள்ள தனது உறவினர் (அண்ணன் மகள்/ சிறுமியின் அக்கா ) வீட்டிற்கு சிறுமியை தாயார் அனுப்பி வைத்திருக்கிறார். அங்கு, உறவினர்கள் பாலியல் தொழில் புரோக்கர்களாக இருந்து வந்திருக்கின்றனர். சிறுமியின் அக்காவின் இரண்டாவது கணவர் மதன் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார். சிறுமியை பாலியல் வல்லுறவும் செய்திருக்கிறார் .
ஒரு வார பேக்கேஜ் என்ற முறையில் சிறுமியை பாலியல் தரகர்களிடம் விலை பேசியிருக்கின்றனர். வாரந்தோறும் ரூ .1.5 லட்சம் ரூபாய் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை தெரிவித்தனர்.