குழந்தை கடத்தல் பீதி-கொலைகள் தொடர்பாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய செய்யாறு வீரராகவன் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடக்கிறது.
குழந்தை கடத்தல் தொடர்பான வதந்திகள் வட மாவட்டங்களை கலக்கி வருகின்றன. காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் குழந்தைகளை கடத்தும் வடமாநில கும்பலின் நடமாட்டம் இருப்பதாக கடந்த சில நாட்களாக வதந்தி பரவி வருகிறது.
குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்ற சந்தேகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்ற சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த ருக்மணி அம்மாள் (வயது 65) என்பவர், கிராமவாசிகளால் அடித்துக்கொல்லப்பட்டார். வேலூரை அடுத்த சிங்கிரிகோவில் என்ற இடத்தில் நேற்று முன்தினம் மாலையில் சாலையில் நடந்த சென்ற 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரை, குழந்தையை கடத்த வந்தவர் என நினைத்து சிலர் அடித்து உதைத்தனர்.
குழந்தை கடத்தல் பீதியின் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவு திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் சுற்றித்திரிந்த ஆண் ஒருவரை கிராம மக்கள் அடித்து உதைத்தனர். இதனால் அவர் மயங்கி விழுந்து பரிதாபமாக செத்தார். பின்னர் அவரது உடலை மேம்பாலத்தின் சுவரில் கட்டி தொங்கவிட்டனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள காட்டுமயிலூர் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு சுற்றித்திரிந்த வடமாநில பெண் ஒருவரை, குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என கருதி கிராம மக்கள் மடக்கி பிடித்தனர். வேப்பூர் போலீசார், அந்த பெண்ணை அங்கிருந்து மீட்டு அழைத்துச்சென்று விசாரித்தபோது அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது. பின்னர் அந்த பெண் சிகிச்சைக்காக விருத்தாசலம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
குழந்தை கடத்தல் கும்பல் பற்றிய வதந்தியால் அப்பாவிகள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், வதந்தி பரப்புவோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 1 ஆண்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் ஆகியோர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
இதற்கிடையே குழந்தை கடத்தல் பற்றி வாட்ஸ் அப் மூலமாக வதந்தி பரப்பியதாக செய்யாறு வட்டம், புரிசை கிராமத்தை சேர்ந்த வீரராகவன் என்ற இளைஞர் இன்று (மே 11) கைது செய்யப்பட்டார். செய்யாறு சரக டிஎஸ்பி குணசேகரன், கைதான வீரராகவனிடம் தீவிர விசாரணை நடத்தினார். வீரராகவன் பொதுமக்களிடையே பீதியை கிளப்பும் வகையில் வாட்ஸ் அப்பில் அவரே பேசி ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில், ‘செய்யாறு பகுதியில் 20 குழந்தைகள் கடத்தப்பட்டிருக்கிறார்கள். உங்கள் குழந்தையை நீங்கள்தான் பார்த்துக் கொள்ளவேண்டும். வேலை, வேலைன்னு இருக்காதீங்க. வேலை முக்கியமா, குழந்தை முக்கியமா?’ எனக் கேட்டு பீதியை கிளப்பியிருக்கிறார். இதற்காகவே அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
குழந்தை கடத்தல் தொடர்பாக வதந்தி பரப்புவோர் மீது இது போன்ற நடவடிக்கைகள் தொடரும் என போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Child trafficking whats app rumours cheyyar veeraraghavan arrested
தேங்காய் இல்லாத பொட்டுக்கடலை சட்னி. புதுசா இருக்குல .. டேஸ்டும் அப்படித்தான்!
ரியல் எஸ்டேட் மோசடி: தமிழகத்தில் 3850 ஏக்கர் நிலத்தை முடக்கிய அமலாக்கத் துறை
குளிர்காலத்தில் கே 2 மலை ஏறிய நேபாள அணிக்கு என்ன தேவைப்பட்டது?
உங்களின் வாழ்நாள் முழுவது பணம் கிடைக்க ஒரு மிகச் சிறந்த வழி.. ரூ. 199 முதலீடு!
விவசாயிகளின் ட்ராக்டர் அணிவகுப்பு – காவல்துறையினரின் தடுப்பை உடைத்து போராட்டம்