‘சின்னத்தம்பியை கும்கியாக மாற்றும் திட்டம் தற்போதைக்கு இல்லை’ – தமிழக அரசு

யானை – மனிதர் மோதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவும், இதற்கு தீர்வு காண குழு அமைக்கவும் உத்தரவிட வேண்டும்

சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்ற எதிர்ப்புத் தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மனுத் தாக்கல் செய்தால் இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் அனுமதியளித்தனர்.

கோவை மாவட்டத்திலுள்ள பெரியதடாகம் ‌வனப்பகுதியில் விவசாய நிலங்களை சின்னத்தம்பி என்ற காட்டுயானை சேதப்படுத்துவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து பெரிய போராட்டத்துக்கு பிறகு சின்னத்தம்பியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.

இதனையடுத்து வாகனம் மூலம் ஆனைமலை புலிகள் காப்பகத்திலுள்ள டாப்சிலிப் வனப்பகுதிக்கு சின்னத்தம்பி யானை கொண்டு செல்லப்பட்டது. சின்னதம்பி யானையின் இருப்பிடத்தை அறிய அதன் உடலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தியிருந்தனர். ஆனால் டாப்சிலிப் பகுதியில் விடப்பட்ட யானை சின்னத்தம்பி இரண்டு நாட்களுக்குள் மீண்டும் ஊருக்குள் புகுந்தது.

கோட்டூர், அங்கலக்குறிச்சி சுற்றுப்பகுதிகளிலுள்ள தென்னந்தோப்புகளில் புகுந்த சின்னத்தம்பியை வனத்துறையினர் மீண்டும் காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. சின்னத்தம்பி உடலில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளதால் அதன் உதவியுடன் யானையின் இருப்பிடத்தை வனத்துறையினர் பின் தொடர்ந்து வந்தனர். தற்போது சின்னத்தம்பி யானை உடுமலைப்பேட்டை அருகே தஞ்சமடைந்தது.

சின்னத்தம்பி யானை குறித்து கருத்து தெரிவித்த தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், காட்டுக்குள் விரட்ட முடியாத காரணத்தினால் சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றப்படும் என தெரிவித்தார்.

இந்நிலையில், சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யபட்டது.

இது தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர் அருண் பிரசன்னா தரப்பில் அவரின் வழக்கறிஞர், நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையிட்டார். அதில் யானை – மனிதர் மோதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவும், இதற்கு தீர்வு காண குழு அமைக்கவும் உத்தரவிட வேண்டும். யானைகளை வேறு இடத்துக்கு கொண்டு செல்வது தொடர்பாக விதிகளை வகுக்க வேண்டும். மேலும் கோவை அருகே பிடிபட்டுள்ள காட்டு யானை சின்னத்தம்பியை கும்கி யானையாக மாற்றக் கூடாது. இது தொடர்பாக வனத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இந்த முறையீட்டை கேட்ட நீதிபதிகள், இது தொடர்பாக மனுத் தாக்கல் செய்தால் பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அனுமதி அளித்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை வனப் பாதுகாவலர் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், ‘சின்னதம்பி யானையைப் பிடித்து கும்கியாக மாற்றும் திட்டம் ஏதும் தற்போதைக்கு இல்லை’ என தெரிவித்தார்.

தற்போது அமராவதியில் நடமாடும் யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்ப இரு கும்கி யானைகளும், யானைகள் நிபுணர் அஜய் தேசாய் மற்றும் வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். எனவே மனுதரார் கூறுவது தவறு என தெரிவித்தார்.

அப்போது மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏற்கனவே மதுக்கரை மகாராஜா என்ற யானையை பிடித்து கும்கியாக மாற்றும் போது அது இறந்து விட்டது. தற்போது சின்னத்தம்பியை கும்கியாக மாற்ற அரசு முயற்சிக்கிறது என தெரிவித்தார்.

தலைமை வனப் பாதுகாவலர் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், எல்லா யானைகளையும் கும்கி யானைகளாக மாற்ற முடியாது. முதலில் முதுமலை வனப்பகுதிக்கு அனுப்ப திட்டமிட்டோம். சிறைபிடிப்பது கடைசி வாய்ப்பாக பயன்படுத்துவோம். இதுவரை யானையை பிடித்து கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை. வனப்பகுதிக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்துவருகிறோம்.

இரு யானைகள் குட்டியுடன் வந்தன. அவற்றை திருப்பி அனுப்பிய போது, சின்னத்தம்பி யானை மட்டும் திரும்பி ஊருக்கு வந்து விட்டது. மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளே தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. கும்கியாக மாற்ற பல பயிற்சிகள் வழங்கப்படும். ஆனால் தற்போது சின்னத்தம்பியை கும்கியாக மாற்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், இது தொடர்பாக நிபுணர்கள் கருத்தை அறிந்து கொள்ள வேண்டும். யானையை தூக்க ஜே.சி.பி இயந்திரங்கள் பயன்படுத்தியுள்ளது கவலை அளிக்கிறது. இதனால் யானை காயமடைந்துள்ளது. மேலும் அமைச்சர் தெரிவித்த கருத்து செய்தியாக வந்துள்ளது என தெரிவித்தனர்.

இதனையடுத்து, மனு தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை அடுத்த வாரம் திங்கள்கிழமைக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chinna thambi elephant madras high court

Next Story
‘வேறு மாநிலத்தில் தமிழர்களுக்கு இப்படி வேலை கிடைத்திருக்குமா?’ – நீதிபதி விளாசல்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com