சிதம்பரத்தில் சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை நடந்ததிற்கான ஆதாரம் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் இருப்பதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமிகளுக்கு கட்டாய இருவிரல் பரிசோதனை நடந்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டினார். சமூக நலத்துறையினர் அதிகாரிகள், பொது தீட்சிதர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்துடன் நவடிக்கை எடுத்ததாக அவர் குற்றம் சாட்டினார். மேலும் குழந்தை திருமணம் நடைபெறவில்லை என்றும் 6 மற்றும் 7 வகுப்பு மாணவிகளை வீட்டில் இருந்து வலுகட்டாயமாக அழைத்து சென்று இருவிரல் பரிசோதனை நடத்தியதாகவும் ஆளுநர் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. டெல்லி தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் நேற்று அதிகாரிகளுடன் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றார். இந்நிலையில் குழந்தை திருமணம் நடைபெற்றதா? என்று தீட்சிதர்களிடம் விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம், மல்லூரில் செய்தியாளர்களை சந்தித்த ஆனந்த கூறியதாவது: ”சிதம்பரத்தில் சிறுமிகளிடம் இருவிரல் பரிசோதனை நடந்ததிற்கான ஆதாரம் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் இருக்கிறது. 100% இந்த பரிசோதனை நடந்தது உண்மைதான். ஆளுநர் கூறியதில் உண்மை உள்ளது. காவல்துறை ஆவணங்களில் இது தொடர்பாக தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தை திருமணம் நடைபெறவில்லை. ஆனால் நடந்ததாக ஒற்றுக்கொள்ள வைக்கப்பட்டார்கள்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”