'உன் வீட்டை முதலில் சுத்தம் செய்... நாடு அதுவாக சுத்தமாகும்' என்று சொல்லக் கேட்டிருப்போம். இதனை சென்னையில் ஒரு ஏரியாவே மிகச் சிறப்பாக செய்து வருகிறது.
சிட்லபாக்கம்... ஆம்! சிட்லபாக்கம் பகுதி மக்கள் தான் இந்த பழமொழியை உண்மையாக்க முயற்சி செய்து வருகின்றனர். சிட்லபாக்கம் ஏரி பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், அது இப்போது அவ்வளவு மாசடைந்து இருக்கிறது தெரியுமா? குடிநீர் பஞ்சத்தில் சென்னை சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில், மழை எவ்வளவு தான் பெய்தாலும், நிலத்தின் நீர் மட்டம் உயர அது போதுமானதாக இல்லை. நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால், மக்கள் குடிநீருக்கு படும்பாட்டை நாம் தினமும் பார்க்கிறோம்.
சிட்லபாக்கம் ஏரி
இந்த நிலையில், ஏரியை சுத்தப்படுத்த, 'இனி நாமே களத்தில் இறங்க வேண்டியது தான்' என்று முடிவெடுத்து களப்பணி ஆற்றி வருகிறது சிட்லபாக்கம் பகுதி மக்களை கொண்ட 'சிட்லபாக்கம் ரைஸிங்' குழு. சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை இக்குழுவில் இணைந்து, எந்த வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் ஏரியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சுத்தப்படுத்தும் பணிக்காக அக்குழு PWD அதிகாரிகளை அணுகிய போது அவர்கள், '2021ல் இருந்து நாங்களே சுத்தப்படுத்தும் வேலையை தொடங்குகிறோம்" என்றார்கள். ஆனால், இது கோடைக்காலம் என்பதால், இப்போதே ஏரியை சுத்தப்படுத்தி, தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதால், காஞ்சிபுரம் மாவட்டத்தின் WRD துறை Executive பொறியாளருக்கு கடிதம் அனுப்பி, அவர் அனுமதி அளித்த பிறகு, சுத்தபடுத்தும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது.
சிட்லபாக்கம் ஏரி சுத்தப்படுத்தும் பணியில் சிறுவர்கள்
கடந்த ஜூன் 2 முதல் ஏரியை சுத்திகரிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 25 பேர் கொண்ட குழு இரவு பகல் பாராமல் இதற்காக உழைத்து வருகின்றனர். இந்நிலையில், சுத்தப்படுத்தும் பனியின் போது அவர்கள் உருவாக்கி வைத்திருந்த வரப்பை, அருகில் இருந்த குடியிருப்புகளைச் சேர்ந்த சிலர் உடைத்து சேதப்படுத்தி இருக்கின்றனர். இதனால், மீண்டும் கழிவு ஏரியில் கலக்க பல நாள் உழைப்பு வீணானது. இருப்பினும், அசராத அந்த குழுவினர் மீண்டும் வரப்பு ஏற்படுத்தி, தங்கள் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.