தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துத் துறை ஏற்பாடு செய்துள்ளது. பஞ்சபூத தலங்களில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அக்னி தலமாக இருக்கிறது.
இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஏராளமானோர் வருகை தந்து சாமி தரிசனம் செய்வர். அதிலும் குறிப்பாக கார்த்திகை மற்றும் சித்திரை மாத பவுர்ணமி தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வர். மலையை சுற்றி கிரிவலம் வந்து தரிசனம் செய்வர். பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் சென்றால் கடவுளின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.
அந்த வகையில் இந்தாண்டு சித்ரா பவுர்ணமி நாளை (செவ்வாய்க் கிழமை) அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கி நாளை மறுதினம் (புதன்கிழமை) அதிகாலை 5.47 மணிக்கு நிறைவடைகிறது. பக்தர்கள் வருகைக்காக அங்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து இன்றும், நாளையும் 1,820 பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதோடு ரயில் நிர்வாகம் சார்பில் 6 சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது.
சென்னையில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து இன்று 527 பேருந்துகளும், நாளை 628 பேருந்துகளும் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ளன. இதே போல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது www.tnstc.in என்ற முகவரியில் டிக்கெட்களை முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
மேலும், கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால் திருவண்ணாமலை கோயிலில் வழக்கமாக உள்ள ரூ.50 சிறப்பு தரிசன கட்டணம் முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil