உலகமெங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: பிரதமர் மோடி உட்பட தலைவர்கள் வாழ்த்து

சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி தேவாலயத்தில், சென்னை மறைமாவட்ட பேராயர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, நள்ளிரவில் தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.

ஏசு கிறிஸ்து பிறந்த தினம் என்று கூறப்படும் டிச.25ம் தேதியன்று கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்துவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். புகழ்பெற்ற சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு நள்ளிரவு திருப்பலியில், ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பிறகு, ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

மேலும் படிக்க – கிறிஸ்துமஸ் வாழ்த்துக் கொண்டாட்டம்

சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி தேவாலயத்தில், சென்னை மறைமாவட்ட பேராயர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். பொதுமக்களின் வசதிக்காக காவல்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டியது. குடும்பம் குடும்பமாக தேவாலயத்திற்கு வந்த கிறிஸ்துவ மக்கள், சிறப்பு திருப்பலியில் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.

மதுரை குயவர்பாளையத்தில் அமைந்துள்ள 175 ஆண்டுகள் பழமைவாய்ந்த தூய மரியன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. புத்தாடை அணிந்து குடும்பத்துடன் வந்திருந்த மக்கள், திருப்பலியில் பங்கேற்றனர்.

கிறிஸ்துவர்களின் புனித தலமாக விளங்கும், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் வழக்காமன உற்சாகத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது. தமிழகம் மட்டுமின்றி, வெளிநாடுகளைச் சேர்ந்த பலரும் சிறப்பு திருப்பலியில் பங்கேற்றனர். கிறிஸ்து பிறப்பினை நினைவு கூறும் வகையில், குழந்தை இயேசுவின் பிறப்பு காட்சிகள் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துச் செய்தியில், “நாம் இயேசு கிறிஸ்துவின் உன்னத போதனைகளை நினைவில் வைத்து, கருணையுள்ள, சமமான சமுதாயத்தை அவர் உருவாக்க முயன்றதை நினைவுபடுத்துவோம். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட கிறிஸ்துமஸ் வாழ்த்து அறிக்கையில், “இரக்கத்தின் மறுவுருவான இயேசுபிரான் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், “இறைமகன் இயேசு மனிதராய் அவதரித்த புனித நாளை கிறிஸ்துமஸ் பெருவிழாகக் கொண்டாடி மகிழும் அன்புச் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “உங்கள் பகைவரிடமும் அன்பு காட்டுங்கள் என்ற போதனையின் மறு உருவமாக வாழும் கிறிஸ்தவ மக்களின் சமுதாயப் பணிகளை, அவர்கள் ஆற்றிவரும் அரும்பணிகளை, யாரும் மறந்திட இயலாது. கிறிஸ்தவ மக்களின் நலனுக்காக கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த நேரங்களில் எல்லாம் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தியிருக்கிறார். அவர்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக நிறைவேற்றியிருக்கும் திட்டங்கள் எண்ணிலடங்காதவை.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி, கிறிஸ்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்து, அவர்கள் அனைத்து வளங்களும் பெற்று நலம்நிறைந்த வாழ்வினைத் தொடர இதய பூர்வமாக வாழ்த்தி மகிழ்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “கிறிஸ்தவ மக்கள் அனைவரும் ஒற்றுமையோடும், அமைதியோடும், நிம்மதியோடும், மகிழ்ச்சியோடும் கிறிஸ்துமஸ் பெருவிழாவை உற்றார் உறவினர்களோடும், நண்பர்களோடும் கொண்டாட வேண்டுமென எனது கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “நாட்டில் அமைதி நிலவ வேண்டும், போட்டி பொறாமைகள் அகல வேண்டும், ஏழைகளின் துயரங்கள் நீங்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். அதை நனவாக்க உழைப்போம் என ஏசுபிரான் அவதரித்த இந்த நன்நாளில், அனைவரும் உறுதி ஏற்போம். அனைவருக்கும் எனது வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், “இந்தியாவில் வாழ்ந்து வருகிற சிறுபான்மையினத்தவருக்கு கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய அச்சுறுத்தல் நிகழ்த்தப்பட்டு வருகிறது. என்றைக்கு மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததோ, அதுமுதற்கொண்டு சிறுபான்மை மக்கள் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்கிற நிலை ஏற்பட்டுள்ளது. சிறுபான்மை மக்களுக்கு உரிய மரியாதையும், கவுரவமும் தந்து அனைவரையும் ஒன்றாக மதித்து நடத்திடும் நல்லரசுகள் மத்தியிலும், மாநிலத்திலும் ஏற்பட ஏசு கிறிஸ்து அருள்பாலிக்கட்டும்” என்று தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close