மேம்பாலம் தடுப்புச் சுவரில் மோதி கீழே விழுந்த வாலிபர் பலி... விபத்தான பைக்கில் இருந்து கஞ்சா பொட்டலம் பறிமுதல்

வாகனத்தை ஓட்டி வந்தவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்...

மோட்டர் சைக்கிள் விபத்து : குரோம்பேட்டை அருகே உள்ள அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த கன்னியப்பனின் மகன் மதிவாணன் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். மதிவாணனுக்கு மிக சமீபத்தில் அவருடைய அப்பா புதிய பைக் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார்.

மதிவாணன் மற்றும் அவருடைய நண்பன் விஜய பிரகாஷ் இருவரும் நேற்று அந்த பைக்கில் தாம்பரம் சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது குரோம்பேட்டை எம்.ஐ.டி  மேம்பாலத்தில் சென்று கொண்டிருக்கும் போது, வண்டி கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதியது.

மோட்டர் சைக்கிள் விபத்து – பலியான வாலிபர்

அதில், பின்னிருக்கையில் அமர்ந்திருந்த விஜய பிரகாஷ் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டார். 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த விஜய பிரகாஷ் மற்றும் அடிபட்ட மதிவாணன் இருவரையும் அரசு மருத்துவமனையில் சென்று சேர்த்தனர் காவல்துறையினர்.

விஜய பிரகாஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். மதிவாணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர்கள் ஓட்டி வந்த வாகனத்தை சோதனையிட்ட போது, வண்டியின் இருக்கைக்கு அடியில் 250 கிராம் கஞ்சா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக விஜயபிரகாஷ் வீட்டில் விசாரணை நடத்திய போது “ஐந்து ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் எங்களிடம் கெஞ்சிக் கொண்டிருப்பான் என் மகன். அவன் எப்படி கஞ்சா அடிக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் விஜயின் தாய்.

மேலும் பள்ளிப்படிப்பை பாதிலேயே விட்டுவிட்டு எங்களை காப்பாற்றுவதற்காக வேலைக்கு சென்று கொண்டிருந்தவன் என் மகன் என்று விஜய பிரகாஷின் தாய் பதில் கூறியிருக்கிறார்.

மதிவாணனின் உடல் நிலை சரியான பின்பு இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும் இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்களிடமும் ஓட்டுநர் உரிமமும் இல்லை, தலைக்கவசமும் அவர்கள் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close