பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் வருமானவரிதுறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களிலும் நடிகர் விஜய் வீட்டிலும் இரண்டாவது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பிரபல சினிமா தாயாரிப்பாளரான அன்புச்செழியன் வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை அதிரடி சோதனை நடத்தியதில், கட்டுக்கட்டாக பணம் ரூ.65 கோடியை பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த அன்புச்செழியன்
மதுரையைச் சேர்ந்த அன்புச்செழியன் சினிமா பைனான்சியராக உள்ளார். இவருடைய கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தங்கமகன், வெள்ளைக்காரதுரை, மருது, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களை தயாரித்துள்ளது. அதே நேரத்தில், மற்ற சினிமா தயாரிப்பு நிறுவனங்களுக்கு பைனான்ஸ் செய்தும் வருகிறார். மேலும், அன்புச்செழியன் அதிமுகவில் மாவட்ட அளவில் முக்கிய பொறுப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர் சினிமா தயாரிப்புக்கு பைனான்ஸ் செய்வதை திரும்ப வசூலிப்பதிலும் கறாரானவர் என்றும் கூறப்படுகிறது.
2003-ம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் தற்கொலை செய்துகொண்டார். இந்த தற்கொலை விவகாரத்தில் அன்புச்செழியன் கொடுத்த நெருக்கடிதான் காரணம் என்று கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நடிகர் சசிக்குமாரின் உறவினரும் தயாரிப்பாளருமான அசோக்குமார் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவருடைய தற்கொலைக்கு பைனான்சியர் அன்புச்செழியன் அளித்த நெருக்கடிதான் காரணம் என்று அவர் மீது புகார் கூறப்பட்டது.
ஐடி சோதனை; கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்
இந்த நிலையில், வருமானவரி ஏய்ப்பு தொடர்பான புகாரின் பேரில் சென்னை, மதுரையில் உள்ள அன்புச்செழியன் வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் சென்னை தி.நகரில் உள்ள அன்புச்செழியன் வீட்டில் கணக்கில் வராத பணம் ரூ.50 கோடி, மதுரையில் உள்ள வீடு, அலுவலகத்தில் ரூ.15 கோடி என ரூ.65 கோடி பணம் கட்டுக்கட்டாக வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் நடத்தப்பட்ட ஐ.டி. சோதனையில் ரூ.65 கோடி பறிமுதல் செய்திருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.