ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் மதுரை வருகையை முன்னிட்டு சாலைகளை சீரமைக்க மாநகராட்சி உதவி ஆணையர் வெளியிட்ட சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் அப்பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
மதுரையில் ஜூலை 22 முதல் 26ஆம் தேதி வரை நடைபெறும் கோவில் நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்க உள்ளார். இதையொட்டி மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த உத்தரவில்," மதுரை மாநகராட்சி மண்டலம் சத்யசார் நகரில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளில் ஆர்.எஸ்.எஸ் தலைவரான மோகன் பகவத் கலந்துகொள்ள உள்ளார். இதனால் அவர் செல்லும் வழிதடங்களில் உள்ள சாலைகளை சீரமைத்தல், தெரு விளக்குகளை பராமரித்தல், சாலைகளை சுத்தமாக வைத்தல் போன்ற பணிகளை செய்திட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பிய நிலையில், அரசின் எந்த விதிகளின் படி மதுரை மாநகராட்சியின் உதவி ஆணையாளர் இந்த சுற்றரிக்கையை வெளியிட்டுள்ளார் என்பதை மதுரை மாவட்ட நிர்வாகம் உடனடியாக விளக்க வேண்டும் என எம்பி சு.வெங்கடேசன் கூறியிருந்தார். சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர் விஜயராஜனும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், இசட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கும் பிரமுகர்கள் பயணம் செய்யும்போது அது தொடர்பான விதிகளின்படி பாதுகாப்பு காரணங்களுக்காக வழக்கமாக செய்யப்படும் முன்னேற்பாடுகள் தான். எனினும் சுற்றறிக்கை வெளியிட்ட அலுவலரிடம் இதுதொடர்பாக விளக்கம் கேட்கப்படும் என்றார்.
இந்நிலையில் மதுரை மாநகராட்சி உதவி ஆணையராக இருக்கும் சண்முகம் அப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகராட்சி ஆணையாளர் கே.பி.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாநகராட்சியில் உதவி ஆணையராக பணிபுரிந்துவரும் சண்முகம் 21.07.21 பிற்பகல் மதுரை மாநகராட்சி பணிகளில் இருது விடுவிப்பதாக கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil