தமிழகத்தின் மையப்பகுதியில் இருக்கும் திருச்சி சர்வதேச விமான நிலையம் சுமார் 702 ஏக்கருக்கும் மேல் நிலப்பரப்பை கொண்டது. இங்கிருந்து 9 அயல் நாடுகளுக்கும், 5 உள்நாடுகளுக்கும் விமானப் போக்குவரத்து நடைபெற்று வருகின்றது. சர்வதேச அளவில் 11-வது இடத்தினை பெற்றிருக்கும் சிறப்பு வாய்ந்த விமான நிலையத்தின் இயக்குனரையே சோதனை செய்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
Advertisment
திருச்சி விமான நிலையத்தின் பாதுகாப்பு பணியில் சுமார் 300-க்கும் அதிகமான மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அவ்வாறு பணியில் இருப்பவர்கள் விமான பயணிகள் உள்ளிட்ட அனைவரையும் சோதனை செய்த பின்னரே விமான நிலையத்திற்குள் அனுப்புவது வழக்கமான நடைமுறையாகும்.
அப்படியிருக்க இந்த திருச்சி சர்வதேச விமான நிலைய இயக்குனராக பணிபுரிந்து வருபவர் சுப்ரமணி. இவர் சில மாதங்களுக்கு முன்பு வெளி மாநிலத்தில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டு பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மாலை திருச்சி விமான நிலையத்தின் முனைய பகுதிக்குள் அவர் வந்தார். அப்போது துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையின் காவலர் ஒருவர் அவரை தடுத்து நிறுத்தியுள்ளார்.
பின்னர் அவரிடம் அடையாள அட்டையை கேட்டுள்ளார். அதனை விமான நிலைய இயக்குனர் சுப்ரமணி காண்பித்த பின்னரும் அவரை உள்ளே அனுமதிக்காமல், அவர் அளித்த அடையாள அட்டையை ஸ்கேனர் கருவி மூலம் மீண்டும் சோதனை செய்துள்ளார். இருந்தபோதிலும் விமான நிலைய இயக்குனர் இது குறித்து கேள்வி எதுவும் கேட்காமல் அமைதியாக சோதனைகளுக்கு தன்னை உட்படுத்திக்கொண்ட பிறகு, அவர் உள்ளே அனுமதிக்கும் வரை காத்திருந்து அவரை கடந்து சென்றார்.
அப்போது அங்கிருந்த சிலர் இவர்தான் இந்த விமான நிலையத்தின் இயக்குனர். இவரையே சோதனை என்ற பெயரில் தடுத்து நிறுத்துவது சரியல்ல எனக் கூறியிருக்கின்றனர். இதுபற்றிய தகவல் அறிந்த அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மத்திய தொழில் பாதுகாப்புப்படை காவலரிடம் விளக்கம் கேட்டனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை வீரர் உடனடியாக வேறு பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குனரையே சோதித்து சாதனை படைத்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பணியில் இருந்த காவலருக்கு விமான நிலைய இயக்குனரை கூட தெரியாமல் அவர் எவ்வாறு பணிபுரிந்தார் என மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
மேலும், விமான நிலைய இயக்குனரை சோதனை செய்யும் நிலை இதுபோன்று பலமுறை நடைபெற்று இருப்பதும், இதனை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் செய்து வருவதாகவும் தெரிவித்தனர். மற்ற அலுவலர்களோ, அதிகாரிகளோ விமான நிலையத்திற்குள் நுழையும்போது அவர்களது அடையாள அட்டையை காண்பித்தால் உள்ளே அனுமதிக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், ஒரு விமான நிலைய இயக்குனர் முனையத்திற்குள் நுழையும்போது அவரின் அடையாள அட்டையை ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்த பின்பு உள்ளே அனுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil