Advertisment

தனியார் பங்களிப்பு… அரசு போக்குவரத்துக் கழகத்தை சீர்குலைத்து விடும்: சி.ஐ.டி.யு கண்டனம்

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதிப்பது அரசு போக்குவரத்துக் கழகத்தை சீர்குலைத்துவிடும் என்று சி.ஐ.டி.யு தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
citu, govt transport, tnstc, setc, tamil nadu govt, tamilnadu govt buses,

அரசுப் பேருந்து

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதிப்பது அரசு போக்குவரத்துக் கழகத்தை சீர்குலைத்துவிடும் என்று சி.ஐ.டி.யு தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

Advertisment

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சி.ஐ.டி.யு) தலைவர் அ. சவுந்தரராசன் மற்றும் பொதுச் செயலாளர் கே. ஆறுமுகநயினார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகளை இயக்க ஆலோசனை வழங்குவதற்கான நிறுவனத்தை தேர்வு செய்வதற்காக ஒப்பந்தப்புள்ளி 1.3.2023ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

அரசின் இந்த நடவடிக்கையை சி.ஐ.டி.யு வன்மையாக கண்டிப்பதுடன், இதைக் கைவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறது. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு, சென்னை நகரத்தில் தனியார் பேருந்துகள் இயங்கி வந்தன. தனியார் நிறுவனங்கள் மக்களிடம் முறைகேடாக கட்டணம் வசூலிப்பது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டன. இதை ஆய்வு செய்வதற்கு பிரிட்டிஷ் அரசு ஒரு குழுவை நியமித்தது. பேருந்து சேவையை அரசு நடத்துவதுதான் மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என அரசு நியமித்த குழுவின் ஆலோசனை அடிப்படையில், பிரிட்டிஷ் அரசாங்கம் பேருந்துகளை தேசியமயமாக்கி அரசின் கட்டுப்பாட்டில் பேருந்து இயக்கம் துவங்கப்பட்டது.

நாடு சுதந்திரம் அடைந்த பின்பு மக்களுக்கு மலிவான, நம்பகமான, இடைவிடாத பேருந்து சேவை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, 1950-ம் ஆண்டு சாலைப் போக்குவரத்து சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி நாடு முழுவதும் அரசுத்துறை பேருந்துகள் இயங்கத் துவங்கின. தமிழ்நாட்டில் 1967-ம் ஆண்டு அறிஞர் அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்ற கழக அரசு பேருந்து தேசியமய கொள்கையை உருவாக்கியது. 1972-ம் ஆண்டு கலைஞர் தலைமையிலான அரசு மாநிலம் முழுவதும் தனியார் பேருந்துகளை தேசியமயமாக்கி அரசு போக்குவரத்து கழகங்கள் உருவாக்கப்பட்டன.

போக்குவரத்து கழகங்கள் உருவான 50 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் இடைவிடாத, நம்பகமான பேருந்து சேவை குறைந்த கட்டணத்தில் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என சமூகத்தில் பல்வேறு பிரிவினருக்கு கட்டணம் இல்லாத பேருந்து பயணம் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகங்கள் தமிழ்நாட்டின் சமூக, பொருளாதார வாழ்வில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. தமிழ்நாட்டின் ஜிடிபி (உள்நாட்டு மொத்த உற்பத்தி) உயர்ந்ததில் போக்குவரத்து கழகங்களுக்கும் சிறப்பான பங்கு உண்டு.

சென்னை நகரத்தில் கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக, அரசு பேருந்துகளே இயங்கி வருகின்றன. சென்னை நகரத்தின் வழித்தடங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட தேசியமய வழித்தடங்கள். இவ்வழித்தடங்களில் போக்குவரத்து கழகங்கள் மட்டுமே பேருந்தை இயக்க முடியும். போக்குவரத்து கழகங்களுக்கு சொந்தமான இந்த வழித்தடங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து ஓட்டும் நோக்கத்டோடு, கடந்த அண்ணா திமுக ஆட்சியில் மோட்டார் வாகனச்சட்டத்தில் 288எ என்ற புதிய பகுதி உருவாக்கப்பட்டது.

இது போக்குவரத்து கழகங்களை சீர்குலைக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை என மிக கடுமையாக ஆட்சேபனை தெரிவித்து சி.ஐ.டி.யு, எல்பிஎப் உள்ளிட்ட அனைத்து சங்கங்களும் போராட்டம் நடத்தின. இப்போராட்டங்களுக்கு எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்ற கழகமும் ஆதரவு தெரிவித்தது. தனியார் மயம் இல்லை. தனியார் பங்களிப்போடு மின்சாரப் பேருந்துகளை இயக்கத்தான் சட்டத்திருத்தம் செய்யப்பட்டதாக அதிமுக அரசு விளக்கம் அளித்தது. ஆனால் கடும் எதிர்ப்பு காரணமாக அந்நடவடிக்கை கைவிடப்பட்டது.

தற்போது அதிமுக அரசால் கைவிடப்பட்ட நடவடிக்கையை திராவிட முன்னேற்ற கழக அரசு துவங்கியுள்ளது ஏற்றுக்கொள்ள முடியாதது.

தனியார் மயம் இல்லை. தனியார் பங்களிப்புடன் மின்சாரப் பேருந்துகளை இயக்க ஆய்வு செய்வதற்காகத்தான் டெண்டர் கோரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மின்சார பேருந்துகளின் விலை சுமார் ரூ. 2 கோடி. 500 பேருந்துகள் இயக்க வேண்டுமானால், ரூ. 1000 கோடி மூலதனம் வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களாலேயே இதுபோன்ற முதலீட்டை செய்ய இயலும். பய கள் போக்குவரத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் நுழைய அனுமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் மின்சாரப் பேருந்து இயக்கச்செலவு சாதாரண பேருந்துகளைவிட கூடுதலானது.

தற்போது மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒரு பேருந்து இயக்க 1 கி.மீட்டருக்கு ரூ. 55 வரை செலவாகிறது. மும்பையில் மின்சாரப் பேருந்துகள் கிராஸ் காண்ட்ராக்ட் அடிப்படையில் இயக்கப்படுகின்றன. ஒரு கிலோ மீட்டருக்கு 125 ரூபாய் தனியாருக்கு வழங்கப்படுகிறது. எனவே இதுபோன்ற நிலை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு மிகப்பெரிய சீர்குலைவை ஏற்படுத்தும்.

ஒன்றிய அரசின் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை பேருந்து சேவை சம்பந்தமாக வெளியிட்டுள்ள ஆய்வின்படி 10,000 பேர் பயணம் செய்ய குறைந்தபட்சம் 50 பேருந்துகளையாவது இயக்க வேண்டுமென கூறியுள்ளது. அதனடிப்படையில் சென்னை நகரத்தில் மட்டும் குறைந்தபட்சம் 6000 பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். தற்போது இயக்கப்படும் 3200 பேருந்துகளும் முழுமையாக இயக்கப்படுவதில்லை. ஓட்டுனர், நடத்துனர் இல்லாமல் தினமும் 900 பேருந்துகள் இயங்குவதில்லை.

ஜெர்மன் வங்கி நிதியுதவியுடன் 2000 பேருந்துகள் வாங்கப்படும் என கடந்த 5 ஆண்டுகளாக ஒவ்வொரு பட்ஜெட்டிலும் கூறப்படுகிறது. ஆனால், இதுவரை ஒரு பேருந்துகூட வாங்கப்படவில்லை. இருக்கும் பேருந்துகளை இயக்காமல் அறிவித்த அடிப்படையில் புதிய பேருந்துகளும் வாங்காத சூழ்நிலையில், தற்போது தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க ஆய்வு செய்வதாக கூறப்படுவது மிக மோசமான நடவடிக்கையாகும்.

எனவே, அரசு வெளியிட்டுள்ள டெண்டர் அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும். சுற்றுச்சூழலுக்கு உகந்த அடிப்படையில் டெல்லி நகரத்தில் இயங்குவதுபோல இயற்கை எரிவாயு மூலம் இயக்கப்படும் பேருந்துகளை போக்குவரத்து கழகங்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், ஓட்டுனர், நடத்துனர்கள் பணி நியமனம் செய்து, சென்னை நகர மக்களுக்கு பேருந்து சேவையை முறையாக வழங்க முழுமையான பேருந்துகளை இயக்க வேண்டும்.

பட்ஜெட்டில் அறிவித்த அடிப்படையில் புதிய பேருந்துகள் வாங்க வேண்டும். சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க, விபத்தைக் குறைக்க, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கி போக்குவரத்து கழகங்களை மேம்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment