சி.ஐ.டி.யு., டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தின் 5ஆவது மாநாடு கோவை மசக்காளிபாளையத்தில் உள்ள ஹர்ஷா மஹாலில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் தொழிலாளர் சட்டங்களை அமலாக்குவது, டாஸ்மாக் ஊழியர்களை பணி வரம் முறைப்படுத்து காலமுறை ஊதியம் வழங்க கோருதல், டாஸ்மாக் நிர்வாகத்தின் சீர்கேடுகளை, அதிகாரிகளின் துஷ்பிரயோகங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து சிஐடியு மாநில தலைவர் ஆ.சவுந்தரராஜன் செய்தியாளர்க@ளை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
டாஸ்மாக் ஊழியர்கள் கடந்த 2003ஆம் ஆண்டிலிருந்து வஞ்சிக்கப்படுவது குறித்தும் அவர்கள் பிரச்சனைகளையும் இம்மாநாடு விவாதிக்கிறது.
ஆட்சி மாறிய போதிலும் டாஸ்மாக் ஊழியர்கள் வருத்தத்தோடு உள்ளனர்.
டாஸ்மாக் சூப்பர் வைசருக்கு ரூ. 13 ஆயிரத்து 500 தான் ஊதியம் வழங்கப்படுகிறது.
ரூ.11 ஆயிரத்து 500 விற்பனையாளருக்கும், அதற்கு கீழ் உள்ள பணியாளர்களுக்கு ரூ.10 ஆயிரத்து 500 மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது.
ரூ.26 ஆயிரம் என்ற குறைந்தபட்ச ஊதியத்தையும், அரசு ஊழியர்களுக்கு நிகரான ஊதியத்தையும் வழங்க வேண்டும்.
டாஸ்மாக் நிர்வாகத்தில் தொழிலாளர் சட்டங்கள் பொருந்துவதே இல்லை.
நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தாமல் ஏமாற்றுகிறார்கள். வேலை நேரம், விடுப்பு, வார விடுமுறை மற்றும் சலுகை என எந்த வித சட்டமும் பின்பற்றப்படுவதில்லை. பணிபுரியும் இடங்களிலும் அடிப்படை வசதிகள் இல்லை. தொழிலாளர்கள் தேவையற்ற இடமாற்றம் செய்யப்படுகிறார்கள். தேவையான இடமாற்றம் கேட்டால் அதற்கு பணம் கேட்கிறார்கள்.
பல துறைகளிலிருந்து வந்து டாஸ்மாக் பணியாளர்களை மிரட்டுகிறார்கள். இந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க கமிஷன் அமைக்க வேண்டும்.
எப்.எல் 2 என்ற கடையில் வெளி நாட்டு மதுபானங்கள் விற்பனை செய்கிறார்கள். இதன் மூலம் தனியார் மயத்தை கொண்டுவர முயல்கிறார்களோ என்ற அச்சம் உள்ளது.
டாஸ்மாக் கடை படிப்படியாக மூடப்படும் என்று அறிவித்துவிட்டு, புதிய எப்.எல் 2 கடைகள் திறக்கப்படுகின்றன.
தொழிலாளர்கள் உயிரிழந்தால் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும்.
நாங்கள் சந்திக்கும் பிரச்னைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வலுவான பிரச்சார இயக்கத்தை தொடங்க உள்ளோம்.
திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 80 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாகக் கூறுகிறது. ஆனால் தொழிலாளர்களுக்கு என எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.
இதனால் அடுத்தகட்டமாக கடை அடைப்பு, தொடர் போராட்டம் என திட்டமிட்டு வருகிறோம். டாஸ்மாக் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு பில் அல்லது ரசீது கொடுக்க நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். டாஸ்மாக்கில் அதிகமாக சிலர் வசூலிக்கும் பணம் அதிகாரிகளுக்கு செல்கிறது.
விற்பனையாகாத வகை மதுபாட்டில்களை தான் டாஸ்மாக் கடைகளுக்கு கொடுக்கிறார்கள். அந்த பாட்டில்களில் கமிஷன் அதிகமாக இருக்கிறதால் இவ்வாறு செய்கிறார்கள்.
அமைச்சர் பேரை சொல்லி ஏராளமான மிரட்டல்கள் மற்றும் இடமாற்றம் போன்ற தொந்தரவுகள் வருகின்றன. டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. ஆனால் இதுவரை காவல் நிலையங்களில் கூட வைக்கவில்லை எனக் கூறினார்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil