ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட பணிகளுக்காக சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் தமிழக மாணவர் கணேஷ்குமார் பாஸ்கர் தேசிய அளவில் 7வது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட பல்வேறு பதவிகளை நிரப்புவதற்காக 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிவில் சர்வீஸ் தேர்வை 829 பேர் எழுதினர். . இதனை தொடர்ந்து நேர்முக தேர்வு, தனிநபர் தேர்வு ஆகியவை இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மற்றும் ஆகஸ்ட் மாதம் நடந்தது. அதனுடைய முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேசிய அளவில் பிரதீப் சிங் என்ற மாணவர் முதலிடம் பிடித்தார். இதில் தமிழகத்தை சேர்ந்த கணேஷ்குமார் பாஸ்கர் என்ற மாணவர் தேசிய அளவில் 7 வது இடம் பிடித்துள்ளார். தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
கணேஷ்குமார் பாஸ்கர் மதுரை காளவாசல் பகுதியை சேர்ந்தவர். இவர் மதுரை கேந்திர வித்தியாலயாவில படித்தவர். இவர் தற்போது நாகர்கோவில் புன்னைநகரில் வசித்து வருகிறார். இவரது தந்தை மத்திய அரசில் உயர் அதிகாரியாக பணி புரிகிறார்.
அதே நேரத்தில், மத்திய அரசு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான ஒதுக்கீடு அடிப்படையில், 78 பேர் தேர்வு பெற்றுள்ளனர். மேலும், இதில் 11 பேரின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய ஆண்டுதோறும் யுபிஎஸ்சி தேர்வு நடத்தி வருகிறது. இந்த ஆண்டிற்கான யுபிஎஸ்சி தேர்வு மே 31ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக சிவில் சர்வீஸ் தேர்வு அக்டோபர் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"