Chennai-Salem 8-lane project : தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் சென்னைக்கு வர பல்வேறு வழிகள் இருப்பினும் தேனி, கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் பகுதியில் வசிக்கும் மக்களின் தேர்வாக எப்போதும் இருந்து வருகிறது சேலம். சேலத்தில் இருந்து சென்னை வருவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரமானது மிகவும் அதிகமாக இருப்பதால் பயண நேரத்தை குறைக்கும் வகையில் 8 வழிச்சாலை (அ) பசுமை வழிச்சாலை என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
அதிமுக ஆட்சியில் இருக்கும் போது, பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நடத்தினார்கள். இருப்பினும் சுற்றுச்சூழல் அனுமதி பெற்று திட்டத்தை மேற்கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
டிசம்பர் மாதம் 15 மற்றும் 16 தேதிகளில் நடத்தப்பட்ட உழவர்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் 8 வழிச்சாலை தொடர்பான தங்களின் ஐயத்தை வெளிப்படுத்திய உழவர்கள் 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்று கோரி மனு அளித்தனர். அவர்களுக்கு பதில் அளித்து தருமபுரி மாவட்ட நிலம் எடுப்பு வருவாய் அலுவலர் வ.முகுந்தன் அனுப்பியுள்ள கடிதத்தில், எட்டு வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலம் நெடுஞ்சாலை துறைக்கு மாற்றம் செய்யப்படவில்லை. அதனால் பட்டாதாரர்கள் தங்கள் நிலங்களை பாகப் பிரிவினை செய்யவோ, பத்திரம் செய்யவோ, கடன் உதவி பெறவோ எந்தத் தடையும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் எட்டு வழிச் சாலைக்காக நிலம் எடுக்கும் பணி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சுற்று சூழல் அனுமதி பெற்ற பிறகு அரசு வழிகாட்டுதல்படி நில எடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளது விவசாயிகளை கலக்கம் அடைய செய்துள்ளது.
சாலைகள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் விரைவில் துவங்க உள்ளது என்று தருமபுரி வருவாய்த்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் கூறியுள்ளனர். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் “பிரதமரை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், எட்டுவழிச்சாலை திட்டத்தை நிறுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என்று கூறினார். ஆனால் தருமபுரி வருவாய்த்துறை அதிகாரிகளோ எட்டுவழிச்சாலைக்கான சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்துள்ளது. எனவே சாலை போடும் பணிகள் உடனே துவங்க உள்ளது என்று விவசாயிகளிடம் கூறியுள்ளனர். இந்த இரண்டு விவகாரங்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக உள்ளது. மாநில அரசு மற்றும் முதல்வரின் நிலைப்பாடு என்பதை உடனே தெளிவுப்படுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் அன்புமணி ராமதாஸ்.
மேலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனில் 7000 விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு நான் தன்னுடைய சார்பில் முன்வைக்கப்பட்ட கருத்துகளை ஏற்றுக் கொண்டு 8 வழிச்சாலை திட்டத்திற்கு கையகப்படுத்தப்பட்ட அனைத்து நிலங்களையும் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. ஆனாலும் தற்போது மாநில அதிகாரிகளின் அறிவிப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் தன்னுடைய அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
எட்டுவழிச்சாலை பற்றி ஒரு பார்வை
மத்திய ரசின் ”பாரத் மாலா” சென்னை சேலம் இடையே 276 கி.மீ தொலைவில் 8 வழிச்சாலை, ரூ. 10 ஆயிரம் கோடியில் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக காஞ்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் 1900 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த திட்டம் தொடர்பான தமிழக அரசின் அறிப்பாணையை ரத்து செய்து 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ம் தேதி அன்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வாரங்களில் திருப்பி அளிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து, தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.