புழல் சிறையில் நேற்று வெளிநாட்டுக் கைதிகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பு கைதிகளும் காயமடைந்தனர்.
புழல் மத்திய சிறையில் போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த கைதிகளுக்கும், துருக்கி நாட்டைச் சேர்ந்த கைதிக்கும் இடையே திடீரென நேற்று வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் தீவிரமடைய ஒரு தரப்பினர் மற்றவர்களைக் கோபத்தில் திடீரென தாக்கினர். பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ள அது மோதலாக மாறியது.
துருக்கி நாட்டைச் சேர்ந்த மஹிர் தாக்கியதில் போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த டொமிங்கோஸ் மற்றும் டயாஸ் ஆகியோர் காயம் அடைந்தனர். மோதலின் காரணமாக காயமடைந்த இவர்களைச் சிறை அதிகாரிகள் சிறை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிகிச்சை முடிந்ததும் மீண்டும் சிறைக்குள் அடைக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.