தமுமுக பெயர் யாருக்கு? மனிதநேய மக்கள் கட்சி – தமுமுக தொண்டர்களிடையே மோதல்

Clash between manidhaneya makkal katchi and TMMK in chennai: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பெயரை பயன்படுத்துவது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தொண்டர்களுக்கு இடையேயான மோதலால் பதற்றம்

சென்னை மண்ணடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பெயரை பயன்படுத்துவது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தொண்டர்களுக்கு இடையேயான மோதலால் பதற்றம் நிலவியது. 

மனிதநேய மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சி மூலம் சட்டமன்ற உறுப்பினரான ஜவாஹிருல்லா தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்த ஹைதர் அலியை அமைப்பில் இருந்து நீக்கி, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பான வழக்கில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை ஹைதர் அலி தரப்பு பயன்படுத்த உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதற்கிடையே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சுருக்கமான தமுமுக என்னும் பெயரை வர்த்தகக்குறி சட்டத்தின்கீழ், ஹைதர் அலி தரப்பினர் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் சென்னை, மண்ணடியில் உள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமையகத்துக்கு அருகிலேயே த.மு.மு.க. என்ற பெயரில் ஹைதர் அலி தரப்பு புதிய அலுவலகத்தை திறந்துள்ளனர். அங்கு தமுமுக தலைமை அலுவலகம் என பேனர் வைத்துள்ளனர். இது குறித்து ஜவாஹிருல்லா தரப்பினர் காவல் நிலையத்தில் நீதிமன்ற தீர்ப்பை மீறி செயல்படுவதாக புகார் அளித்தனர்.

ஆனால் பெயரை பதிவு செய்திருப்பதால் பேனரை அகற்ற முடியாது என காவல்துறையினர் தெரிவித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்றிரவு மனித நேய மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஹைதர் அலி தரப்பு அலுவலகத்துக்கு சென்றபோது, இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறி, ஒருவரையொருவர் கல்வீசித் தாக்கிக் கொண்டனர். அங்கிருந்த பேனர் கிழிக்கப்பட்ட அகற்றப்பட்டது. ஹைதர் அலி தரப்பு அலுவலகம் சூறையாடப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி இருதரப்பினரையும் விரட்டி அடித்தனர். இந்நிகழ்வில் ஒரு காவலர் உட்பட 3 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து, தமுமுக பொறுப்பு பொதுச்செயலாளர் ஹாஜா கனி கூறுகையில், தமுமுக என்ற பெயரில் செயல்படுவதும், பேனர் வைப்பதும் என தேவையற்ற சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி அதன்மூலம் தமிழக அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் நோக்கில் கடந்த 2 மாதங்களாக தொடர்ச்சியாக எதிர்தரப்பினர் செயல்பட்டு வருகிறார்கள். இது குறித்து காவல் துறையிடம் முறையிட்டு இருக்கிறோம். தொண்டர்கள் தலைமையகம் என்று பேனர் வைத்ததால் அதனை நீக்கியிருக்கிறார்கள். எனக் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Clash between manidhaneya makkal katchi and tmmk in chennai

Next Story
‘நினைவில் நின்ற விமான பயணம்’ – நாடாளுமன்ற சகா குறித்து நெகிழ்ந்த தயாநிதி மாறன்!Tamilnadu news in tamil: Dayanidhi Maran MP shares about Rajiv Pradap Roodi
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com