பாலமேடு பேரூராட்சி அரசு பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நடந்த சம்பவம் அனைவரையும் அதிர்சிக்குள்ளாக்கி இருக்கின்றது. இந்த பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் ராஜா* என்கிற மாணவன் அதேவகுப்பில் படிக்கும் சகமாணவனால் தாக்கப்பட்டுள்ளான். இந்த தாக்குதலுக்கு ஜாதியே மூலதனமாக இருந்தது என்பதையே நாம் இங்கு கவனித்தாக வேண்டும்.
ராஜா* என்கிற மாணவன் மறவபட்டி என்னும் கிரமாத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமையன்று எப்போதும் போல் வழக்காமாக பள்ளிக்கு வந்திருக்கிறான். அன்று மாலை 4.10 மணிக்கு பள்ளி வகுப்பு முடிவடைந்ததும் ராஜாவும் அவரின் நண்பரும் அருகில் இருக்கும் ஐஸ் கிரீம் கடைக்கு சென்றுள்ளனர். மீண்டும் பள்ளிக்கு வந்து தங்கள் பேக்கை தேடியபோது தான், தங்களது பேக் களவாடப்பட்டிருப்பதும், பெரிய ஆபத்துக்குள் சிக்கப்போவதும் தெரிய வந்திருக்கின்றது. பேக்கை தேடிய போது , விக்னேஷ்* என்கிற மாணவன் ராஜாவை ஜாதியின் பெயரை இழிவுபடுத்தி திட்டியதோடு மட்டுமல்லாமல், பென்சில் கத்தியால் ராஜாவின் முதிகில் ரத்தக் காயம் வரும் வரை கீரியுள்ளார்.
தகவல் அறிந்த வந்த ராஜாவின் தாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதல் கட்ட உதவியை அளித்துள்ளார். மேலும், ராஜாவின் தந்தை காவல் நிலையம் சென்று வழக்குப் பதிவும் செய்துள்ளார். ராஜாவின் தந்தை இது குறித்து தெரிவிக்கையில், "இந்த மறவபட்டி கிராமத்தில் தலித்துகளுக்கு எதிராக பெரும் கட்டமைப்பு உள்ளது. அதன் வெளிப்பாடாகத் தான் இந்த வன்முறையை நம்மால் பார்க்க முடிகிறது, விக்னேஷின் தந்தை ரூ. 500 கொடுத்துவிட்டு வழக்கை வாபஸ் வாக்குங்கள் என்று சொல்கிறார். எங்கள் மனவலியை மூடி மறைக்கப் பார்க்கிறார்கள். நாங்கள் வழக்கு தொடுத்ததிலிருந்து, எங்களுக்கான எதிர்ப்புகளையும் நாங்கள் சந்தித்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழும், எஸ்சி / எஸ்டி (அட்டூழியங்களைத் தடுக்கும்) சட்ட விதிகளின் கீழும், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
* - பள்ளி மாணவர்கள் என்பதால் பெயர் மாற்றப்பட்டிருக்கிறது