தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 19 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. மாணவர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம் செய்துள்ளன.
முன்னதாக, கடந்த செப்டம்பர் 1ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளி, கல்லூர்கள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
மாணவர்களை வரவேற்க எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். “விருந்தினர்களை வாசலுக்கு வந்து வரவேற்பதைப்போல வரவேற்பு கொடுங்கள்” என கேட்டுக்கொண்டுள்ளார்.
பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, தமிழக அரசு ஏற்கனவே வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது. ஆசிரியர்கள் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். மாணவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். பள்ளி நுழைவு வாசலில் உடலின் வெப்ப நிலை பரிசோதிக்கும் கருவி வைக்க வேண்டும் உள்ளிட்ட நெறிமுறைகள் இடம்பெற்றுள்ளன.
மாணவர்களுக்கு முதல் 15 நாள்களுக்கு எவ்வித பாடமும் எடுக்கக்கூடாது என பள்ளி கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், “மாணவர்கள் புத்துணர்வுடன் நேரடி வகுப்புகளில் கலந்துகொள்வதற்கு ஏதுவாக , முதல் இரண்டு வாரத்திற்கு கதை, பாடல், ஓவியம் என மனமகிழ்வு செயல்பாடுகளை முதல் கட்டமாக ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “பெற்றோர் எவ்வித பயமும் இன்றி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வையுங்கள். அதே சமயம், பள்ளிக்கு மாணவர்கள் வருவது கட்டாயமில்லை. வீட்டில் இருந்தப்படியே, ஆன்லைனில் கல்வி கற்கலாம்” என தெரிவித்தார்.
சுமார் 40 லட்சம் மாணவர்கள், நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளிக்க திரும்பவுள்ளனர். அதிக மாணவர்களை கொண்ட பள்ளிகளில் ஒரே நேரத்தில் அனைத்து மாணவர்களும் வகுப்பறையில் அமராத வகையில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கு வராத மாணவர்கள், வீட்டில் இருந்தப்படியே ஆன்லைனில் கல்வி கற்பார்கள்.
பள்ளி திறப்பு அறிவிப்பு வெளியானதுமே, பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள், மாணவ-மாணவிகள் பயன்படுத்தும் கழிவறைகள் என அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil