”மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் சதி இருக்கிறது”, என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில், வருமான வரித்துறையினர் நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 9.30 மணிமுதல் அதிகாலை 2 மணிவரை சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) இந்த சோதனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “போயஸ் கார்டன் இல்லத்தில் சின்னம்மா சசிகலாவின் அறையை வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். ஆனால், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறையை சோதனையிட அனுமதிக்கவில்லை. இருவரின் அறைகளுக்கும் இடையே உள்ள ஹாலில் சோதனை மேற்கொண்டனர். பாழாகிப்போன 2 லேப்டாப்கள், 3-4 பென்ட்ரைவ்கள், ஜெயலலிதாவின் அரசியல் சம்பந்தப்பட்ட கடிதங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சேகர் ரெட்டி வீட்டில் இருந்ததுபோல் தங்க குவியலோ, வைர நகைகளோ ஜெயலலிதா வீட்டில் இல்லை”, என கூறினார்.
மேலும், ”ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் புனிதத்தலமான அம்மாவின் இல்லத்தில் சோதனை என்பது மன வருத்தத்தை தருகிறது. இந்த சோதனையில் சதி இருக்கிறது.”, எனவும் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல், அதிமுக தொண்டர்கள் தங்கள் பக்கம் இருப்பதால் எங்களை மிரட்டவே இத்தகைய சோதனைகள் நடத்தப்படுவதாகவும், எந்த அச்சுறுத்தலுக்கும், நடவடிக்கைக்கும் தான் பயப்பட மாட்டேன் எனவும் டிடிவி தினகரன் கூறினார்.
இந்த சோதனையின் பின்னணியில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் துணையிருப்பதாகவும், அவர்களை அம்மாவின் ஆன்மா மன்னிக்காது எனவும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.