பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன 14) விமரிசையாக தொடங்கியுள்ளது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்கு 2,026 காளைகள், 1,735 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில், 1,100 காளைகள் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்போட்டி நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் ஜல்லிகட்டு வீரர்கள் உறுதிமொழி ஏற்புடன் நிகழ்வு தொடங்கியது. போட்டியை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஜல்லிக்கட்டு போட்டியில் சீறி வரும் காளைகளை அடக்கும் வீரர்களுக்கு இருசக்கர வாகனம், தங்க காசு, வெள்ளி காசு, குக்கர், ரொக்கப் பணம் போன்றவை பரிசாக வழங்கப்படுகின்றன. குறிப்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் சார்பாக டிராக்டரும் , துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக காரும் பரிசாக வழங்கப்படவுள்ளன.
அதன்படி, போட்டியில் முதல் பரிசு பெறும் காளைக்கு டிராக்டரும், முதல் பரிசு பெறும் வீரருக்கு காரும் பரிசாக வழங்கப்படும். இதன் தொடர்ச்சியாக நாளை (ஜன 15) பாலமேட்டிலும், நாளை மறுநாள் (ஜன 16) அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியின் போது காளைகளுக்கு அல்லது வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸ் உதவியுடன் தயாராக உள்ளனர்.