தமிழரின் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு. வரலாற்று சிறப்புமிக்க பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டிகளை காண இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் பொதுமக்கள் தமிழகத்திற்கு வருவார்கள். அதில் தமழகத்தில் தென்பகுதியான பாலமேடு, அலங்காநல்லூர்,அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக புகழ்பெற்றது. அந்த வகையில் நேற்று முன்தினம் அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் போட்டிகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
அடுத்து காணும் பொங்கலை முன்னிட்டு உலகபுகழ்பெற்ற அலங்காநல்லூரில் இன்று தொடங்கியுள்ளது. தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வரம் ஆகியோர் இந்த போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகு போட்டியில் களமிறங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த போட்டியில், மாடுபிடி வீரர்கள் 655 பேருக்கும், 700 காளைகளுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில்,
பாரம்பரிய மிக்க ஜல்லிக்கட்டு விளையாட்டை மீட்டெடுத்து பாதுகாத்தது அதிமுக அரசு தான். உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு எனும் பாராட்டு பெற்றது அலங்காநல்லூர் கிராமத்து மண். வீரம் நிறைந்த மாடுபிடி வீரர்களுக்கும், காளை வளர்ப்பவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறுகையில்,
உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை அதிமுக அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது. காளைகளை வீரர்கள் அடக்கும் காட்சியை உலக மக்களே கண்டு ரசித்து வருகின்றனர். போட்டியை சிறப்பாக நடத்தி வரும் நிர்வாகிகளுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்" என தெரிவித்துள்ளார்.
அலங்காநல்லூரில், நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு, முதல்வர், துணை முதல்வர் வருகை தர மூன்று ஆயிரத்திற்கு மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“