பல மடங்கு லாபத்தை தமிழ்ச் சமுதாயத்திற்கு தரப்போகும் முதலீடு: காலை உணவுத் திட்ட விரிவாக்க விழாவில் ஸ்டாலின் நெகிழ்ச்சி

மாணவர்களுக்கு கல்வி அறிவு வழங்குவது மட்டுமின்றி அவர்களின் பசியையும் போக்க வேண்டும். இனி பள்ளிக்கு வரும் மாணவர்கள் சோர்வுடன் வரமாட்டார்கள், முக மலர்ச்சியுடன்தான் வருவார்கள்.

மாணவர்களுக்கு கல்வி அறிவு வழங்குவது மட்டுமின்றி அவர்களின் பசியையும் போக்க வேண்டும். இனி பள்ளிக்கு வரும் மாணவர்கள் சோர்வுடன் வரமாட்டார்கள், முக மலர்ச்சியுடன்தான் வருவார்கள்.

author-image
WebDesk
New Update
mk stalin

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றான 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை' நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தும் திட்டத்தை செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கி வைத்தார்.

சென்னை - மயிலாப்பூர், புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் மாணவர்களுக்கு உணவு பரிமாறி முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவு செய்து வைத்தனர். அதனை தொடர்ந்து ஸ்டாலின், பகவந்த் மான், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பள்ளி குழந்தைகளுடன் சேர்ந்து உணவு அருந்தினர். பின்னர் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோர் பேசினர்.

Advertisment

மு.க.ஸ்டாலின் பேசுகையில்; ”இன்றைய நாள் என் மனதுக்கு நிறைவான நாள்.. மகிழ்ச்சிக்குரிய நாள். குழந்தைகளுடன் இணைந்து காலை உணவு சாப்பிட்டதால் குழந்தைகளைப் போல எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது. எப்படி இன்றைக்கு முழுவதும் ஆக்டிவாக இருக்கிறீர்களோ; அதுபோல நானும் இன்று முழுவதும் ஆக்டிவாக இருப்பேன். முதமைச்சரின் காலை உணவுத் திட்டத்தால் 20 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகிறார்கள் என்றால் இதைவிட மனநிறைவு வேறு என்ன இருக்கப்போகிறது. 

நாடே திரும்பிப் பார்க்கும் புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கி வைக்க அப்போதைய டெல்லி முதல்வர்  அரவிந்த் கெஜ்ரிவால் வந்தார். இப்போது முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்திற்கு பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் வருகை தந்துள்ளார். திராவிட மாடல் அரசின் திட்டங்களை நாடே உற்றுநோக்குகிறது. மாணவர்களுக்கு கல்வி அறிவு வழங்குவது மட்டுமின்றி அவர்களின் பசியையும் போக்க வேண்டும். இனி பள்ளிக்கு வரும் மாணவர்கள் சோர்வுடன் வரமாட்டார்கள், முக மலர்ச்சியுடன்தான் வருவார்கள். இந்தத் திட்டத்தால் மாணவர்களின் வயிறு மட்டும் நிரம்பவில்லை, அவர்கள் உடல்நிலையும் மேம்படுகிறது.

Advertisment
Advertisements

20 லட்சம் மாணவர்கள் சூடான, சுவையான, சத்தான உணவை சாப்பிட்டுவிட்டு வகுப்பறைக்கு செல்வார்கள். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஆண்டொன்றுக்கு ரூ.600 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் இதனை செலவு என நான் சொல்ல மாட்டேன்.. இது சிறப்பான சமூக முதலீடு. எதிர்காலத்தில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பல மடங்கு லாபத்தை தமிழ்ச் சமுதாயத்திற்கு தரப்போகும் முதலீடு. மாணவச் செல்வங்களின் திறமை அறிவு, ஆற்றல் மீது நம்பிக்கை வைத்து இந்த முதலீட்டை தமிழ்நாடு அரசு செய்கிறது. நீங்கள் எல்லோரும் படித்து முன்னேறி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பணியாற்றினால் அதுதான் இந்த திட்டத்தின் உண்மையான வெற்றி. காலை உணவுத் திட்டத்தை நானே நேரடியாக கண்காணித்து வருகிறேன். இத்திட்டத்தால் மாணவர்களின் கல்வி கற்கும் திறன் அதிகரிப்பு, வருகைப் பதிவு உயர்வு, நோய்த்தொற்று ஏற்படுவதும் குறைந்துள்ளது. பல நாடுகளில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்வந்துள்ளன, இதுதான் நம் சாதனை. எல்லா துறைகளிலும் தமிழ்நாட்டை நம்பர் 1 ஆக்குவதே எனது இலக்கு”,  என்று ஸ்டாலின் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேசுகையில், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவதும் சிறப்பான திட்டம். தமிழ்நாட்டைப் போல் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டு உணவு தான் தேசிய உணவாக இருந்து வருகிறது. இந்தியாவின் எந்த பகுதிக்கு சென்றாலும், தென் மாநில உணவுகளே நிறைந்திருக்கின்றன. காலை உணவுத் திட்டம் போல் ஒரு சிறந்த திட்டம் இல்லை என்று சொல்லுவேன். ஏனென்றால் சுமார் 20 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவது மிகப்பெரிய சாதனை. ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பெயரை முதல்வர் ஸ்டாலின் இங்கு கூறியதை மிகப்பெரிய மரியாதையாக கருதுகிறேன். ஆம் ஆத்மி கட்சி சாமானிய மக்களுக்கான கட்சி.

எப்போதும் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு பஞ்சாப் அரசு முக்கியத்துவம் அளித்து வந்துள்ளது. ஆம் ஆத்மி கிளினிக்குகளில் சுமார் 70 ஆயிரம் பேர் நாள்தோறும் சிகிச்சை பெற்று வருகிறார்கள், அதனை விரைவில் விரிவாக்கம் செய்ய உள்ளோம். அதேபோல் நாளையே பஞ்சாப் அமைச்சரவையில் காலை உணவுத் திட்டம் குறித்து விவாதிக்க உள்ளேன்.
பகத் சிங், ராஜகுரு உள்ளிட்டோர் வீர மரணம் அடைந்த மண்ணான பஞ்சாப்பிற்கு முதல்வர் ஸ்டாலின் வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

இந்த திட்டத்தின் மூலம் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 3 லட்சத்து 5 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயன்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: