நிவர் புயலால் ஏற்பட்ட சேதங்களுக்கு முதல்வர் பழனிசாமி வெள்ளிக்கிழமை நிவாரணங்களை அறிவித்தார். நிவர் புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடாக அறிவித்தார்.
வங்கக் கடலில் உருவான நிவர் புயல் நவம்பர் 25ம் தேதி இரவு புதுச்சேரி - மரக்காணம் அருகே கரையைக் கடந்தது. நிவர் புயல் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்தது. விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ஆகிய மாவட்டங்களில் புயல் காற்று மற்றும் கனமழையால் பயிர்கள் சேதமடைந்தது.
கடலூர் ரெட்டிச்சாவடியில் நிவர் புயலால் சாய்ந்த வாழை மரங்கள், சேதமடைந்த நெற் பயிர்களை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். புயல், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயப் பயிர்கள், கால்நடைகள் உயிரிழப்பு ஆகியவற்றுக்கு அரசு நிவாரணம் வழங்கப்படும் என்று கூறினார்.
இந்த நிலையில், முதல்வர் பழனிசாமி இன்று நிவர் புயல் நிவாரணங்களை அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது, “இந்திய வானிலை ஆய்வு மையம் நவம்பர் அன்று இரவு காரைக்கால் – மாமல்லபுரம் அருகில் ‘நிவர்’ புயல் கரையைக் கடக்கும் என்று அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு போர்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்தியது.
இதன் காரணமாக, உயிர் சேதங்கள் பெருமளவில் தவிர்க்கப்பட்டன. புயல் கரையைக் கடந்தபோது அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் வீசிய பலத்த காற்றினாலும், பெய்த கன மழையினாலும் ஏற்பட்ட பாதிப்புகளை விரைந்து சீர் செய்யும் நடவடிக்கைகள் தற்போது போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நிவர் புயல் காரணமாக, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் நபர்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் இருக்க, அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், பாய், போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், குடும்பம் ஒன்றிற்கு 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, ஒரு சேலை மற்றும் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர ஒரு கிலோ பருப்பும், சமையல் எண்ணெயும் வழங்க உத்தரவிட்டேன்.
புயல் காரணமாக உயிர் சேதத்தைத் தடுக்க, அரசு கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது. எனினும், எதிர்பாராமல் நிவர் புயல் மற்றும் கன மழை காரணமாக இது வரை 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், 6 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும், ஆக மொத்தம் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.” என்று அறிவித்துள்ளார்.
இதனிடையே, பிரதமர் மோடி நிவர் புயல் பாதிப்புகள் குறித்து முதல்வர் பழனிசாமியிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார். முதல்வரிடம் தமிழகத்திற்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்த பிரதமர் மோடி, நிவர் புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமாக அறிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.