கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி நாளை (ஏப்ரல் 26) காலை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் இரண்டாவது அலை நாட்டில் வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களாக, தமிழகத்தில் தினசரி கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 25) ஒரே நாளில் புதியதாக 15,659 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்று பரவத் தொடங்கிய நாள் முதல் இன்றுவரை 10 லட்சத்து 81 ஆயிரத்து 988 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று 82 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,557 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் தற்போது 1 லட்சத்து 5 ஆயிரத்து 180 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 4,206 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தில் கொரோனா பரவல் 2வது அலை காரணமாக தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், மேலும், கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுளது. இன்று (ஏப்ரல் 25) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில், நாளை (ஏப்ரல் 26) காலை 9.15 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலின் தன்மை மற்றும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"