கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி தமிழகத்தில் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், ஊரடங்கு நீட்டிப்பால் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மே மாதத்திற்கான பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கத்தில், தமிழகத்தில் கடந்த மார்ச் 24 மாலை 6 மணி முதல் மார்ச் 31 வரை முதலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, பிரதமர் மோடி கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார்.
இதனிடையே, ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாகவும் மாநில அரசுகள் மேற்கொண்டுவரும் கொரோனா வைரஸ் வைரஸ் தடுப்பு பணிகள் தொடர்பாகவும் பிரதமர் மோடி காணொலி மூலம் ஏப்ரல் 11-ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
தமிழக முதல்வர் பழனிசாமி பிரதமருடனான ஆலோசனைக் கூட்டத்தில், கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழகத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்க கோரிக்கை விடுத்தார். மேலும், ஊரடங்கு உத்தராஇ ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதே போல, மற்ற மாநில முதல்வர்களும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், மஹாராஷ்டிரா, தெலங்கான, பஞ்சாப், கேரளா, ஒடிஷா ஆகிய மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிரதமரின் கலந்தாய்வுக் கூட்ட நடவடிக்கைகளின் அடிப்படையிலும், உலக சுகாதார அமைப்பின் கருத்தின்படியும், மருத்துவ நிபுணர் குழு மற்றும் பொது சுகாதார வல்லுநர் குழுக்களின் பரிந்துரைகளின்படியும், மாநிலத்தில் ஊரடங்கை தளர்த்தினால், நோய்த் தொற்று அதிகரிக்கக் கூடும் என்பதை கருத்தில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படியும் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், எப்பொழுதும் வழங்கப்படும் அரிசி ஆகியவை நியாயவிலைக் கடைகளில் விலையில்லாமல் வழங்கப்படும்.
கட்டடத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பதிவுபெற்ற அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 2வது முறையாக ரூ.1,000 நிவாரணமாக வழங்கப்படும். பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு, மே மாதத்திற்கான 15 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் விலையில்லாமல் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையில் பேக்கரிகள் இயங்க தடையில்லை என்றும் பார்சல் விற்பனை மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள மக்கள்,கொரோனா வைரஸ் நோய்த் தொற்று தொடர்பான தங்களுடைய சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள டெலி மெடிசின் சொஸைட்டி ஆப் இந்தியா நிறுவனத்தில் பதிவு பெற்ற சிறந்த மருத்துவர்களைக் கொண்டு, தொலை மருத்துவ முறை மூலம் தங்கள் மருத்துவ சந்தேகங்களுக்கு தெளிவு பெற தமிழக அரசு வழி செய்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் சமூக விலகலைக் கடைப்பிடித்து, கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். அப்போது, முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.