நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல்வர் பழனிசாமி, தமிழகம் முழுவதும் நாளை (நவம்பர் 25) புதன்கிழமை பொது விடுமுறை அறிவித்துள்ளார்.
வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ள நிவர் புயல் நாளை மாலை மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையைக் கடக்கிறது என்பதால், கடலோர மாவட்டங்களில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
முதல்வர் பழனிசாமி நிவர் புயல் முன்னெச்சரிகை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். முதல்வர் பழனிசாமி, துறை சார்ந்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் மேலான்மை மையத்தில் அமைக்கபப்ட்டுள்ள புயல் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன், அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் ஆர்.பி.உதயகுமார் ஆகியோரும் உடன் சென்றனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, நிவர் புயல் காரணமாக நாளை (புதன்கிழமை) தமிழகம் முழுவதுமுள்ள அரசு அலுவலகங்களுக்கு பொது விடுமுறை விடப்படுவதாகவும் நிலைமைக்கேற்ப விடுமுறையை நீட்டிப்பது தொடர்பாக பின்னர் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
பொது விடுமுறை அறிவிக்கப்பட்டாலும், அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் மட்டும் பணிக்கு வருவார்கள்.
நிவர் புயல் அதி தீவிரப் புயலாக வலுப்பெறுவதால் புயல் கரையைக் கடக்கும்போது மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பொது விடுமுறை விடப்படுகிறது. கடலோர மாவட்டங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.” என்று கூறினார்.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, “செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி. அதில் தற்போது 21 அடி நீர் இருப்பு உள்ளது. 22 அடி வரும்போது ஏரியில் இருந்து நீர் திறக்க உத்தரவிட்டுள்ளேன். மழை 2 நாட்களுக்குதான் இருக்கும் என்று கூறியுள்ளார்கள். மழை பெய்வதை பொறுத்துதான் செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறக்கப்படும். ஏரிகளின் கரைகளை பலப்படுத்த போதிய மணல் மூட்டைகளை வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.