வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் கூட்டணி தொடருமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் வருகின்ற காலத்தில் அதைப் பற்றி பேசலாம் என்று கூறினார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, முதல்வர் பழனிசாமி, செய்தியாளர்களிடம் பேசியதாவது, “சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிகள் குறித்தும் சேலம் மாவட்டத்தினுடைய வளர்ச்சிப் பணிகள் குறித்தும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்டத்தை பொருத்தவரை நேற்றைய தினம் வரை கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுடைய எண்ணிக்கை 4750. வைரஸ் தொற்று ஏற்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3673 பேர். தற்போது கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களுடைய எண்ணிக்கை 958 பேர். சிகிச்சை பலனளிக்காமல் இறந்தவருடைய எண்ணிக்கை 48 பேர். சேலம் மாவட்டத்தில் இதுவரை கொரொனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டவர்களுடைய மொத்த எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர்.
இந்த கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 2,572 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 194 வென்டிலேட்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஐசியு படுக்கைகள் 279 இருக்கிறது. போதிய உபகரணங்கள் அனைத்தும் கையிருப்பில் உள்ளன. இந்த வைரஸ் பரவலை தடுப்பதற்காக மாவட்டம் முழுவதும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அந்த முகாமில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 506 பேர் கலந்து கொண்டார்கள். அவர்களில் பரிசோதனை செய்து ஒருவர் தோற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களை மருத்துவமனையில் சேர்த்து குணமடையச் செய்கிறோம். இப்படி செய்த காரணத்தினால் தான் இன்றைக்கு சேலம் மாவட்டத்தில் நோய் பரவல் தடுக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சிப்பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றன. தமிழக அரசு அறிவித்த பெருப்பாலான நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இன்னும் பல திட்டங்கள் விரைவாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சேலம் மாவட்டத்தில் பல்வேறு பாலங்களின் பணிகள் நிறைவுபெற்று திறக்கப்பட்டுள்ளன. பல்வேறு கூட்டு குடிநீர் திட்டம் மூலமாக இன்றைக்கு சேலம் மாவட்டம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டத்தில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என எந்த இடத்திலும் குடிநீர்ப் பிரச்சினை இல்லாத மாவட்டமாக உருவாக்கியிருக்கிறோம். சேலம் மாவட்டத்தில் வறண்ட பகுதிகளில் உள்ள 100 ஏரிகளுக்கு நீரேற்றும் திட்டம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. காவிரி டெல்டா பகுதிகளில் சுமார் 4 லட்சம் ஏக்கரில் நடவு பணிகள் நடைபெற உள்ளன.” என்று கூறினார்.
புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்று முதல்வரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, “ஏற்கனவே, புதிய கல்விக் கொள்கை குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளேன். மாநில அரசினுடைய கொள்கை இரு மொழிக் கொள்கை. தமிழ், ஆங்கிலம் மொழிகளை தொடர்ந்து தமிழக அரசு கடைபிடித்து இருக்கிறது.
அண்ணா காலத்தில் இருந்து எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் என தொடர்ந்து அரசு இரு மொழிக் கொள்கையை தொடர்ந்து பின்பற்றும்.
சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை குறித்து ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது அந்த குழுவின் அறிக்கைப்படி அரசு செயல்படும். கொரோனா வைரஸ் முன் களப்பணியாளர்கள் உயிரிழந்தால் ரூபாய் 10 லட்சம் நிவாரணம் என அறிவித்தோம். ஆனால், தற்போது அதை ரூபாய் 25 லட்சமாக உயர்த்தி உள்ளோம். கொரோனாவிற்கு நேரடி சிகிச்சை அளிப்பவர்கள் இருந்தால் அவரின் குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் என்று அறிவித்தோம்” என்று கூறினார்.
பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, “கொரோனா வைரஸ் குறைய வேண்டும். இது குழந்தைகளுடைய உயிர் சம்பந்தமான பிரச்சனை. அதனால், நாம் அதிகமாக கவனம் செலுத்த வேண்டுமென்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். எல்லோரும் அச்சப்படுகிறார்கள். முதலில் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதனால், நம்முடைய மாநிலம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் என்ன நிலைமை இருக்கிறதோ, அதற்கு ஏற்றவாறு தமிழ்நாடு அரசு செயல்படும். நம்முடைய மக்களை காக்க வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் அதற்கு பாதுகாப்பான அம்சங்கள் எப்போது வருகிறதோ அப்போது பள்ளிகள் திறக்கப்படும்.” என்று கூறினார்.
மழை அதிக அளவில் பெய்துகொண்டிருக்கிறது தமிழக அரசு என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது என்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “மழை அதிகமாக பெய்கிறது மலைச் சரிவு ஏற்படுகிறது. கேரளாவில் கூட மலைச் சரிவு ஏற்பட்டு 80க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக சொல்கிறார்கள். பல பேர் இறந்ததாக சொல்கிறார்கள். நம்முடைய மாநிலத்தில் நீலகிரி மாவட்டத்திலும் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. கனமழையால் பாதிக்கப்பட்டவர்களை பள்ளிகளில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவுகளை கொடுத்து இருக்கிறோம். நெற்று இரண்டு அமைச்சர்கள் அந்த பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டு இருக்கிறார்கள். உள்ளாட்சித் துறை அமைச்சரும் கால்நடை துறை அமைச்சரும் நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி இருக்கிறார்கள். போர்க்கால அடிப்படையில் அரசு இயந்திரம் முடுக்கி விடப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
வருகிற சட்டமன்ற தேர்தலில் இதே கூடணி தொடருமா என்ற கேள்விக்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தேர்தல் வருகின்ற காலத்தில் அதைப் பற்றி பேசலாம்” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.