சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்ப்பதாக விமர்சனம் செய்த முதல்வர் பழனிசாமி, தான், விவசாயியாக இருப்பதால்தான், புதிய வேளாண் சட்டத்தை ஆதரிப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், டெல்லியில் கடுமையாக போராடி வருகிறார்கள். விவசாயிகளுக்கு ஆதரவாக டிசம்பர் 8ம் தேதி நாடு முழுவதும் பாரத் பந்த் என்று பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது. தொடர்ந்து, விவசாயிகள் டெல்லியில் போராடி வருகிறார்கள். தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் டிசம்பர் 8ம் தேதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், முதல்வர் பழனிசாமி, கடலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். தொடர்ந்து, புதன்கிழமை இரண்டாவது நாளாக நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி ஆலயத்திற்கு சென்ற முதல்வர் பழனிசாமியை பங்குதந்தைகள் வரவேற்று மாதா சிலையை வழங்கினர்.முதல்வர் பழனிசாமி அங்கே மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
இதையடுத்து நாகூர் தர்காவிற்கு சென்ற முதல்வர் பழனிசாமி, தொப்பி அணிந்து தொழுகையில் ஈடுபட்டார். பின்னர் கனமழையால் சேதமடைந்த நாகூர் தர்காவின் சுற்றுச்சுவர் மற்றும் கீழக்கரை சாலைப் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அவருடன் மஜக பொதுச்செயலாளரும் எம்.எல்.ஏ-வுமான தமிமுன் அன்சாரியும் உடன் இருந்தார்.
பின்னர், நாகையில் கருங்கன்னியில் நீரில் மூழ்கியுள்ள பயிர்களை பார்வையிட்ட முதல்வர் பழனிசாமி அங்கிருந்த விவசாயிகளிடம் பயிர் சேத விவரங்களை கேட்டறிந்தார். இதையடுத்து, பழங்கள்ளிமேடு கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 360 பேருக்கு நிவாரணப்பொருட்கள், விவசாய இடுபொருட்களை வழங்கினார். அங்கே பொதுமக்களுக்காக சமைக்கப்பட்டிருந்த உணவை சாப்பிட்டுப் பார்த்தார்.
இதையடுத்து, முதல்வர் பழனிசாமி, திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொக்கலாடி கிராமத்தில், மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்டஹர். அப்போது விவசாயிகள் அவரிடம் அழுகிய நெற்பயிர்களை காண்பித்து விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
தென்னவராயநல்லூரில் ஆய்வு செய்த முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது: “2016-ல் திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள அம்சம்தான் வேளாண் சட்டத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனால், காழ்ப்புணர்ச்சி காரணமாக வேளாண் சட்டத்தை சிலர் எதிர்க்கிறார்கள். 3 வேளாண் சட்டங்கள் இருக்கிறது. இந்த மூன்று சட்டங்களில் தமிழ்நாடு விவசாயிகள் எதில் பாதிக்கப்படுகிறார்கள் என்று சொல்லுங்கள். நான் தமிழ்நாடு விவசாயிகள் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறேன். அகில இந்திய அளவில் பேசுவதற்கு தமிழ்நாட்டில் வேறு ஒரு தலைவர் இருக்கிறார். அவர் பேசுவார். ஏனென்றால் அவர் தமிழ்நாடு மக்களைப் பற்றி சிந்திக்க மாட்டார். நான் விவசாயியாக இருப்பதால்தான் இந்த 3 வேளாண் சட்டங்களையும் ஆதரிக்கிறேன்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் பழனிசாமி, “எட்டு வழி சாலை திட்டம் மத்திய அரசு செயல்படுத்தும் திட்டம். இதில் நிலத்தை கையகப்படுத்திக் கொடுப்பதே மாநில அரசின் பணி. இந்த திட்ட பணிகள் முடிவடைய ஆறு ஆண்டுகள் ஆகும். வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏற்ப சாலைகள் அமைக்க வேண்டியது அவசியம்” என்று கூறினார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”