தமிழக சட்டமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவது சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டுவருகிறார். முதல்வர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் பெரிய அளவில் கூடி வருகின்றனர். அதிமுக நிர்வாகிகள் முதல்வர் பிரச்சாரம் செய்யும் இடங்களில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மக்களை பேருந்துகளில் அழைத்து வருகின்றனர். அரசியல் கூட்டங்களுக்கும் பிரச்சாரத்துக்கும் மக்களை அழைத்து வருவது என்பது இன்றைக்கு வழக்கமானதுதான். ஆனால், அதிமுகவினர் முதல்வர் பிரச்சாரக் கூட்டங்களுக்கு மக்களைக் அழைத்து வருவதற்கு மினி பஸ்களை பயன்படுத்துவதால், போக்குவரத்துக்கு மினி பஸ்கள் இல்லாம பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 2 நாட்களாக தென் மாவட்டங்களில் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இன்று திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் செய்கிறார். தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரத்தில் இன்று இரவு 7 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்ய உள்ளார். அதற்காக, சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து பொது மக்கள் மினி பஸ்கள் மூலமாக கொண்டுவரப்பட்டுள்ளனர். இதனால், பாவூர்சத்திரத்தைச் சுற்றி 20 கி.மீ மக்களின் வாழ்க்கை முடங்கிப் போன சூழல் ஏற்பட்டுள்ளது.
தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் அதுவும் பாவூர்சத்திரம் போன்ற பகுதிகளில் பெரும்பாலான மக்கள் விவசாயக் கூலிகள்தான். விவசாயக் கூலி வேலைக்கு செல்லும் மக்கள் காலையிலேயே பேருந்துகளைப் பிடித்து 10 – 15 கி.மீ தூரத்தில் இருக்கும் ஊர்களுக்கு சென்று விவசாய கூலி வேலைகள் செய்துவிட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.
தற்போது, தென்காசி மாவட்டத்தில் விவசாயம் செய்யப்பட்டு பயிர்கள் செழிப்பாக காணப்படுகிறது. இது பயிரகளுக்கு களை பறிக்கும் நேரம் என்பதால், விவசாயக் கூலி வேலை செய்யும் மக்கள் காலையிலேயே களை பறிக்கும் விவசாயக் கூலி வேலைக்கு புறப்பட்டு செல்கின்றனர். இவர்கள் அனைவரும் தற்போது மினி பஸ்களையே போக்குவரத்துக்கு நம்பியுள்ளனர்.
கொரோனா தொற்று பரவலுக்குப் பிறகு, தனியார் பேருந்துகள் இயக்கம் பெரிய அளவில் குறைந்துவிட்டன. அதிலும், கிராமப்புறங்களில் இந்த தனியார் பேருந்து போக்குவரத்து இல்லாத சூழலே ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும், மினி பஸ்களையே மக்கள் நம்பியுள்ளனர்.
இந்த சூழலில்தான், தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரத்துக்கு இன்று (பிப்ரவரி 18) இரவு 7 மணிக்கு முதல்வர் பழனிசாமி வருகை தந்து பிரச்சாரம் செய்ய உள்ளார். முதல்வர் வருவதால் மக்களைத் திரட்டுவதற்கு மினி பஸ்கள் மூலம் கிராமப் புறங்களில் இருந்து மக்களை அழைத்து வந்துள்ளனர். பாவூர்சத்திரத்தில் முதல்வரின் வருகைக்காக மக்கள் ஆயிரக் கணக்கானோர் காத்திருக்கின்றனர். அவர்களை மீண்டும் அழைத்து செல்ல மினி பஸ்கள் அங்கேயே இருக்கின்றனர்.
அதே நேரத்தில், காலையில் விவசாயக் கூலி வேலைக்கு சென்ற மக்கள் வேலை முடிந்து மாலையில் வீடு திரும்ப முடியாமல் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். அந்த மக்கள் மினி பஸ் இல்லாததால் கிட்டத்தட்ட 10-15 கி.மீ நடந்து செல்கின்றனர். பணம் இல்லாத விவசாயக் கூலி வேலை செய்யும் மக்கள் மினி பஸ் இல்லாமல் தங்கள் வீடுகளுக்கு பல கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டியிருப்பதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
முதல்வர் பிரச்சாரக் கூட்டத்திற்கு ஆளும் கட்சி பிரமுகர்கள் வேறு தனியார் பேருந்துகளைப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு மினி பஸ்களை பயன்படுத்தியிருப்பதால் கிராமப்புற மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், ஒரு இடத்தில் முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் செய்ய வருகிறார் என்றால் அந்த பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 20 கி.மீ சுற்றுவட்டாரப் பகுதிகளில் போக்குவரத்தும் மக்கள் நடமாட்டமும் முடங்கிப்போவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
முதல்வர் பிரச்சாரத்துக்கு வரும் பகுதிகளில், சாதராண மக்கள் பயன்படுத்தும் மினி பஸ்களை மக்களை அழைத்து வருவதற்கு பயன்படுத்துவது போன்ற செயல்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். போக்குவரத்தை ஆளும் கட்சி நிர்வாகிகளின் இத்தகைய செயலால் அரசுக்கு நல்ல பெயர் கிடைப்பதைவிட கேட்டபெயரே ஏற்படுகிறது. அதனால், முதல்வர் பழனிசாமி பிரச்சாரத்துக்கு செல்லும் இடங்களில், ஆளும் கட்சியினர் இது போன்ற அராஜகங்களை விட்டொழிக்க அறிவுறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.