முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் டெல்லியில் பேட்டி அளித்தபோது, எடப்பாடி தொகுதியில் நான் 9 முறை வெற்றி பெற்றவன் என்று பெருமை பொங்கச் சொல்லியிருக்கிறார்.
அவர் சேவல் சின்னத்தில் போட்டியிட்ட முதல் தேர்தல் 1989. அதில் அவர் வெற்றி பெற்றார். 1991 ஆம் ஆண்டும் வெற்றி பெற்றார். 1996 தேர்தலில் ஜெயலலிதாவே தோல்வி அடைந்தாரே, இவர் எங்கே ஜெயித்தார்?
அடுத்து 2001 தேர்தலில் எடப்பாடி தொகுதி அதிமுகவால் பாமக.வுக்கு ஒதுக்கப்பட்டு அந்தக்கட்சி வெற்றி பெற்றது. அடுத்த 2006 தேர்தலிலும் எடப்பாடியில் பாமகவே திமுக கூட்டணியில் நின்று வெற்றி பெற்றது. பிறகு 2011, 16 தேர்தல்களில் எடப்பாடியார் வென்றது உண்மைதான்.
ஆக, 1989, 1991, 2011, 2016 ஆகிய 4 தேர்தல்களில் மட்டுமே எடப்பாடியில் இவர் வென்றார். 1996, 2006 தேர்தல்களில் அதே எடப்பாடியில் தோல்வி கண்டுள்ளார். இடையில் 1998 ஆம் ஆண்டு திருச்செங்கோடு பாராளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார் எடப்பாடியார். ஆனால் ஒரே ஆண்டில் மத்திய அரசு கவிழ்க்கப்பட்டு, 1999 ஆம் ஆண்டு அதே திருச்செங்கோட்டில் போட்டியிட்டு, திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த மதிமுக வேட்பாளர் கண்ணப்பனிடம் தோல்வி அடைந்தார். இதுதான் வரலாறு.
அப்படியிருக்க, 9 முறை எடப்பாடியில் போட்டியிட்டு 9 முறையும் வெற்றி பெற்றேன் என்று எப்படி எடப்பாடியார் சொல்கிறாரோ தெரியவில்லை. ஒரு முதல்வர், தன் தொடர்பான இந்த விவரங்களை மறந்திருக்க முடியுமா? ஏன் அப்படி சொன்னார்?
ரா.மணி, மூத்த பத்திரிகையாளர்