அதிமுகவில் முதல்வர் பழனிசாமி, தேர்தல் விளம்பரங்களில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டுவதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில், இருவரும் தேர்தல் பிரச்சாரத்துக்காக ஒரே வாகனத்தில் 70 கி.மீ பயணம் செய்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
தமிழகத்தில் வருகிற மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், மாநிலத்தை 10 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் அதிமுக தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள தீவிரமாக பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது.
அதே போல, எதிர்க்கட்சியான திமுக வருகிற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும் என்ற முனைப்பில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்று திமுகவினர் மக்கள் கிராம சபைகள் மூலம் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
திமுகவின் தேர்தல் பிரச்சாரம், அதிமுக அரசின் குறைகளை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ள நிலையில், அதற்கு மாற்றாக அதிமுக வெற்றிநடைப் போடும் தமிழகம் என்று பிரச்சாரம் செய்து வருகிறது.
தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே இரு கட்சிகளும் தொலைக்காட்சிகள், பத்திரிகைகளில் தேர்தல் பிரச்சார விளம்பரங்களை போட்டிபோட்டுக்கொண்டு வெளியிட்டு வருகின்றன.
அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட வெற்றிநடை போடும் தமிழகம் என்று பிரச்சார விளம்பரங்கள் முதல்வர் பழனிசாமி மட்டுமே இடம்பெற்றிருந்தார். இதனால், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்துக்கு முக்கியத்துவம் அளிக்காமல் ஓரங்கட்டப்படுவதாக அதிமுகவில் சலசலப்பும் சர்ச்சையும் எழுந்தது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வருகிற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்தான் அறிவித்தார் என்றாலும், அதிமுகவின் விளம்பரங்களில் ஓ.பன்னீர்செல்வம் இடம்பெறாதது ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. முதல்வர் பழனிசாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே உரசல் இருப்பதாக கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில்தான் முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தேர்தல் பிரச்சாரத்துக்காக இவருவரும் ஒரே வாகனத்தில் 70 கி.மீ பயணம் செய்து எல்லா சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் திங்கள்கிழமை முற்பகல் விமானம் மூலம் தூத்துக்குடியை அடைந்தனர். அங்கிருந்து திருநெல்வேலி மாவட்டம் அருகே உள்ள சேரன்மாதேவி செல்வதற்கு இருவரும் 70 கி.மீ தொலைவு ஒன்றாக பயணம் செய்தனர். முதல்வர் இ.பி.எஸ் மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் இருவரும் விமான நிலையத்தில் ஒன்றாக வெளியே வந்ததால் இருவரும் ஒரே வாகனத்தில் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவர்களுடைய வாகனம் சேரன்மாதேவியை அடைவதற்கு முன்பு இருவரும் சேர்ந்து முதன்முறையாக தேர்தல் பிரச்சாரம் செய்தனர். பின்னர், இருவரும் அதிமுகவின் மூத்த தலைவர், மறைந்த முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் நினைவு மணிமண்டபத்தை திறந்துவைக்க சேரன்மாதேவி சென்றனர்.
அதிமுகவில் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இடையே உரசல் இருப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில், இருவரும் தேர்தல் பிரச்சாரத்துக்காக ஒன்றாக ஒரே வாகனத்தில் 70 கி.மீ பயணம் செய்து சர்ச்சைகளுக்கு பை சொல்லி முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"