இலவசங்களை அறிவிப்பதில் போட்டி: ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர், மாதம் ரூ1500 அறிவித்தார் இபிஎஸ்

முதல்வர் பழனிசாமி “குடும்பத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 6 விலையில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும். குடும்ப தலைவிக்கு மாதம் தோறும் ரூ.1500 வழங்கப்படும்” என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளார்.

மகளிர் தினத்தையொட்டி முதல்வர் பழனிசாமி “குடும்பத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 6 விலையில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும். குடும்ப தலைவிக்கு மாதம் தோறும் ரூ.1500 வழங்கப்படும்” என்று தேர்தல் வாக்குறுதியாக தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலக்தில் அதிமுக ஒருங்கினைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இருவரும் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, “மகளிர் தினத்தையொட்டி மகளிர் நலனுக்காக ஆண்டு ஒன்றுக்கு 6 சமையல் கேஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும். சமூகத்தில் பொருளாதார சமநிலையை ஏற்படுத்தும் விதமாக குடும்பத்திற்கு மாதம் தோறும் 1,500 ரூபாய் குடும்பத்தலைவியிடம் வழங்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், பல அறிவிப்புகள் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும்.

கேள்வி: திமுகவைப் பார்த்துதான் நீங்கள் இந்த அறிவிப்பை வெளியிடுவதாகக் கூறுகிறார்களே?

முதல்வர் பழனிசாமி: இது தவறு, நாங்கள் ஏற்கெனவே 10 தினங்களாக தேர்தல் அறிக்கையை தயாரித்துக்கொண்டிருக்கிறோம். அது எப்படியோ கசிந்துவிடுகிறது. கசிந்ததை வைத்து அவர் (மு.க.ஸ்டாலின்) நேற்று பொதுக்கூட்டத்தில் அறிவித்திருக்கிறார்.

கேள்வி: நீங்கள் விவாதிக்கும் ஒரு விஷயம் வெளியே செல்கிறது என்று சொல்கிறீர்களே எப்படி?

முதல்வர் பழனிசாமி: “எல்லாமே ஒரு ஆர்வக் கோளாறு. ஒரு நல்ல திட்டங்கள் வருகிறபோது அதை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வது எளிது. பத்திரிகையாளர்கள் ஒரு செய்தியை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளும்போது அந்த செய்தி கசிந்துவிடுகிறது இல்லையா, அதைப்போலதான் இதுவும்.

கேள்வி: வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும்?

முதல்வர் பழனிசாமி: மார்ச் 12ம் தேதி வேட்பு மனு தாக்கல் ஆரம்பமாகிறது. அதற்குள் வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.

முன்னதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் பணம் உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, திருச்சியில் நேற்று நடைபெற்ற திமுகவின் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தார்.

இதையடுத்து, மநீம தலைவர் கமல்ஹாசன் தங்கள் கட்சியின் அறிவிப்பைப் பார்த்து திமுக காப்பியடித்து அறிவித்ததாக கூறினார். இந்த நிலையில், முதல்வர் பழனிசாமி, அதிமுகவின் தேர்தல் அறிக்கை கசிந்ததால் அதைவைத்து திமுக முன்கூட்டியே அறிவித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமன்றத் தேர்தலில் ஆளும் அதிமுக, எதிர்க்கட்சியான திமுக, மற்றும் மூன்றாவது அணியை அமைத்துவரும் மநீம கட்சிகள் குடும்பத் தலைவிக்கு நிதியுதவி, ஆண்டுக்கு 6 இலவச கேஸ் லிண்டர் என போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் வாக்குறுதியாக இலவசங்களை அறிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cm edappadi k palaniswami election promise monthly rs 1500 for woman householder and 6 gas cylinder free per year

Next Story
அமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதி ஒதுக்கீடு – டிடிவி தினகரன் அறிவிப்பு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com