முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் வந்ததையடுத்து மிரட்டல் விடுத்த நபர் யார் என்று காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு வெள்ளிக்கிழமை ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில், முதல்வர் பழனிசாமியைக் கொல்ல மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்ததால் காவல்துறை உடனடியாக முதல்வர் இல்லம் பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர். மிரட்டல் கடிதத்தில் அனுப்புனர் முகவரியில் பிரவின் குமார், 10வது செக்டார், கே.கே.நகர் என்று குறிப்பிடப்பட்டு முதல்வர் இல்லம், கிரீன்வேஸ் ரோட், ராஜா அண்ணாமலைபுரம் என்று முதல்வருக்கு அனுப்பப்பட்டிருந்தது.
முதல்வருக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதத்தை அனுப்பிய நபர் யார் என்று காவல்துறை விசாரணையைத் தொடங்கினர். முதல்வரின் தனிப் பாதுகாப்பு அதிகாரிகள் இந்த கடிதத்தை அபிராமபுரம் காவல்நிலையத்துக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.
காவல் ஆய்வாளர் சண்முகவேலன் தலைமையிலான போலீஸ் குழுவினர், கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரிக்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த முகவரியில் குடியிருந்த பிரவின் குமார் என்பவர் தான் ஒரு ஏ.சி. மெக்கானிக் என்றும் தான் அப்படி எதுவும் மிரட்டல் கடிதம் அனுப்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தைச் சேர்ந்த பிரவின் குமார் தான் ஒரு அப்பாவி என்றும் சில ஆண்டுகளாக கே.கே.நகரில் வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், பிரவின் குமார் அப்பாவியாகத் தெரிகிறார். அவருக்கு தெரிந்த யாரோதான் அவரை மாட்டிவிட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் அவருடைய பெயரைக் குறிப்பிட்டு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் எழுதியிருப்பதாகத் தெரிகிறது. முதல்கட்ட விசாரணையில் இந்த கடிதம் அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது. முதல்வர் இல்லத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
இதே போல, ஜூன் 2ம் தேதி கிரீன்வேஸ் இல்லத்தில் உள்ள முதல்வர் இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த தகவல் தலைமை செயலகத்தில் இருந்து காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, சோதனை செய்த காவல்துறையினர் அந்த மிரட்டல் வெறும் புரளி என்று உறுதி செய்தனர். மேலும், மிரட்டல் விடுத்தவர் விழுப்பரத்தைச் சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil