நாட்டின் 74வது சுதந்திர தினவிழாவில் தமிழக முதல்வர் பழனிசாமி சென்னை ஜார்ஜ் கோட்டையில் 4வது முறையாக தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். தேசியக் கொடியை ஏற்றிவைத்த முதல்வர் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து, முதல்வர் பழனிசாமி சுதந்திர தின உரையை நிகழ்த்தினார். முதல்வர் பழனிசாமி சுதந்திர தின உரையில் பேசியதாவது, “முத்துராமலிங்க சேதுபதி, வ.வே.சு ஐயர், ஜெய்ஹிந்த் செண்பகராமன், வீரமுரசு சுப்பிரமணிய சிவா, மகாகவி பாரதியார், தந்தை பெரியார், மூதறிஞர் ராஜாஜி, சத்யமூர்த்தி, பெருந்தலைவர் காமராஜர், பொதுவுடமைத் தலைவர் ஜீவா, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை வீரவாஞ்சிநாதன், தில்லையாடி வள்ளியம்மை போன்ற எண்ணற்ற தலைவர்களும் அறிஞர்களும் கவிஞர்களும் இந்திய விடுதலைக்காக எண்ணிலடங்கா தியாகங்களை செய்துள்ளனர். அவர்கள் சுதந்திர உணர்வை பரப்பி இன்னும் நமது நாட்டின் அடையாளங்களாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வே என்ற மகாகவி பாரதியின் பாடல் வரிகளுக்கு ஏற்ப சமீபத்தில் நமது எல்லைப் பகுதியில் அண்டை நாடு ஆக்கிரமிப்பு செய்ய முற்பட்டபோது நாம் இந்தியர் என்ற உணர்வோடு படைக்கு துணிந்து வலுவாக நின்று நிரூபித்தோம். நம் நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த இந்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாம் அனைவரும் உறுதுணையாக இருப்போம் என்று உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.
சுதந்திரத்தைப் பெற்று விடுவதுகூட எளிது அதைப் பாதுகாப்பது அதைவிடக் கடினம். பாதுகாப்பதுகூட எளிது, சுதந்திரத்தால் ஏற்படும் பயனை எல்லோரும் சரிசமமாக் சென்று சேரச் செய்வது கடினம் என்றார் பேரறிஞர் அண்ணா. பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்களின் வழிவந்த எனது தலைமையிலான தமிழக அரசு அமைதி, வளம், வளர்ச்சி ஆகிய முப்பெரும் கோட்பாட்டின் அடிப்படையில் சுதந்திரத்தின் பயனை அனைவரும் பெறும் வகையிலான பல்வேறு திட்டங்களை தீட்டி தமிழ்நாடு எல்லா துறைகளிலும் அளப்பரிய முன்னேற்றம் கண்டு ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
இந்த ஆண்டு உலகத்தையே கொரோனா வைரஸ் தொற்று புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. நோய்த் தொற்றில் இருந்து தமிழ்நாட்டு மக்களை மீட்பதற்கு சரியான வழிமுறைகளை கடைபிடித்து உங்களுடைய மக்கள் நலன் அரசு நேர்மையுடனும் உண்மையுடனும் செயல்பட்டு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது.
குறிப்பாக நாட்டிலேயே நாளொன்றுக்கு பரிசோதனை செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கையும் இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கையும் தமிழ்நாட்டில்தான் அதிகம். இதனால், விலைமதிக்க முடியாத மனித உயிர்களை நாம் காப்பாற்றினோம். எனவேதான், தமிழ்நாட்டில் நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நோயினால் இறந்தவர்களின் சதவிகிதம் மிகவும் குறைவாக உள்ளது.
விழித்திருங்கள் விலகி இருங்கள் வீட்டிலேயே இருங்கள் என்ற எனது பணிவான வேண்டுகோளை ஏற்று தமிழ்நாட்டு மக்கள் உரிய ஒத்துழைப்பை வழங்கி வருவதை நான் அறிவேன். ஊரடங்கு அமல்படுத்திய போதும் அரசு விவசாயப் பணிகளுக்கும் சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி அளித்து அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. மக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி பொது இடங்களில் முகக் கவசம் அணிதல் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் கைகளை முறையாக கழுவுதல் ஆகியவற்றை உறுதிபடுத்தி வருகிறோம்.
நமது மாநிலத்தில் இருந்து 4 லட்சத்து 18 ஆயிரத்து 913 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பத்திரமாக அவருடைய சொந்த மாநிலங்களுக்கு பத்திரமாக அனுப்பி வைத்துள்ளோம். மேலும், 12.08.2020 வரை 64 ஆயிரத்து 660 வெளிநாடு வாழ் தமிழர்களை வந்தே பாரத், சமுத்திர சேது இயக்கத்தின் மூலம் பத்திரமாக தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்துள்ளோம்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பஞ்சாயத்துகளில் வாழும் மக்களுக்காக இலவசமாக மறுமுறை உபயோகிக்க தகுந்த முகக் கவசங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து வீடுவீடாக காய்ச்சல் மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கான அறிகுறி உள்ளவர்களைக் கண்டறிந்து ஆர்டி-பிசிஆர் சோதனை செய்து தனிமைப்படுத்துதல் சிகிச்சை அளித்தல் போன்றவற்றை மேற்கொண்டு வருகிறோம்.
தற்போது மாநில அளவில் ஒரு லட்சத்து 29 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கு ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. மருத்துவப் பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த சுமார் 1800 மருத்துவர்கள் 7000 செவிலியர்கள் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். நவீன உயிர் காக்கும் மருந்துகள் கொள்முதல் செய்து அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மருந்துகள் பரிசோதனை கருவிகள் என்95 முகக் கவசங்கள் பாதுகாப்பு உடைகள் சிடி ஸ்கேன் எக்ஸ்ரே இயந்திரங்கள் கபசுரக் குடிநீர் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் ஆகியவை கொள்முதல் செய்து அனைத்து மருத்துவமனைகளுக்கும் களப் பணியாளர்களுக்கும் போதுமான அளவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளது.
தற்போது சித்த மருத்துவ முறையிலான சிகிச்சை நோயாளிகளுக்கு சிறப்பாக அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழக அரசு மாநில அரசின் நிதி ஆதாரத்தை கொண்டு கோவிட் நோய் தொற்று தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக சுமார் 6 ஆயிரத்து 550 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
பொது முடக்க காலத்தில் உணவு பாதிப்பினை உறுதிசெய்ய ஏழைகள் சிறு தொழில் செய்வோர் சிறு வணிகம் செய்வோர் போன்றோர் 2.01 கோடி குடும்பங்களுக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல் மே ஜூன் ஜூலை மாதங்களுக்கு அரிசி சர்க்கரை மற்றும் சமையல் எண்ணெய் பருப்பு போன்ற ரேஷன் பொருட்களை விலையில்லாமல் வழங்கிய ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். மேலும், அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்க நிவாரணம் வழங்கியது தமிழ்நாடு தான். கட்டுமானத் தொழிலாளர்கள் உடலுழைப்பு தொழிலாளர்கள் உள்ளிட்ட 17 அமைப்புசாரா தொழிலாளர்கள், பட்டாசு தொழிலாளர்கள் நாட்டுப்புற கலைஞர்கள் திரைப்பட தொழிலாளர்கள் உட்பட 14 நல வாரிய தொழிலாளர்கள் தீப்பெட்டி தொழிலாளர்கள் என மொத்தம் 36.6 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ரொக்கம் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் 13.35 லட்சம் பேர்களுக்கு தலா ஆயிரம் ரொக்க நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் முதியோர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆதரவற்றவர்கள் ஆகியோரின் பசிப்பிணி போக்கும் அட்சய பாத்திரமாக அம்மா உணவகங்கள், சிறப்பு முகாம்கள், சமூக உணவுக் கூடங்கள் மூலம் தினமும் சுமார் 8 லட்சம் மக்களுக்கு சூடான சுவையான சுகாதாரமான உணவு விலையில்லாமல் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் ஊரக சாலைகளை மேம்படுத்தவும் வருமானத்தை பெருக்கவும் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பயனாளிகளுக்கு பயன்படும் வகையில் கொரோனா சிறப்பு நிதி உதவி தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சையும் சேர்க்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும். இந்த செலவை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான நீட்டிக்கப்படும். மருத்துவர்கள் செவிலியர்கள் சுகாதாரப் பணியாளர்கள் தூய்மைப் பணியாளர்கள், உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, கூட்டுறவு, உணவு வழங்கல் துறை மற்றும் இதர அரசுத்துறை ஊழியர்கள் அனைவரும் இந்த இக்கட்டான காலத்தில் தன்னலம் பாராமல் அயராது பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் நாட்டு மக்களின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களை அழைத்து விருதுகள் வழங்கி தமிழக அரசு கௌரவப்படுத்த உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
“நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்” “இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப நாம் அந்நியருக்கு எதிராக நடத்திய சுதந்திரப் போரில் ஒன்றிணைந்து போராடி எப்படி வெற்றி பெற்றோமோ அதேபோல தமிழக அரசு தொற்று நோய்க்கு எதிராக போராடி வெல்லும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். அதிக அளவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராமப்புற மற்றும் பொருளாதார அளவில் பின்தங்கியுள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகளின் மருத்துவராகும் கனவை நனவாக்கும் விதமாக குறுகிய காலத்தில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், அரியலூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், திருப்பூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு அவை அனைத்துக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
தமிழக அரசு நீட் தேர்வை நடத்த கூடாது என்று கொள்கை அளவில் தொடர்ந்து எடுத்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக நீட் தேர்வினால் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஏழை எளிய மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வது மிகவும் குறைந்து விட்டது என்பதை தெளிவாக ஆராய்ந்து அதனை நிவர்த்தி செய்யும் விதமாக அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் மருத்துவராக லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் அவர்களுக்கு இந்த ஆண்டு முதல் மருத்துவப் படிப்பில் ஒதுக்கீடாக 7.5 விழுக்காடு வழங்க தமிழக அரசு முடிவு செய்து அதையே வரலாற்று சிறப்புமிக்க சட்டமாக பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.