கொரோனா அறிகுறி இருந்தால் ஈஷா நிகழ்ச்சிக்கு சென்றவர்களையும் சோதனைக்கு உட்படுத்துவோம்: முதல்வர்

இஷா மையத்தில் நடைபெற்ற சிவராத்திரி கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் காய்ச்சல் அறிகுறி இருந்தால் அவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று முதல்வர் பழனிசாமி புதன்கிழமை கூறினார்.

இஷா மையத்தில் நடைபெற்ற சிவராத்திரி கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் காய்ச்சல் அறிகுறி இருந்தால் அவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று முதல்வர் பழனிசாமி புதன்கிழமை கூறினார்.

தமிழக முதல்வர் எடப்பாடி முதல்வர் பழனிசாமி சென்னை, சாந்தோம், களங்கரை விளக்கம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டுவரும் அம்மா உணவகங்களில் இன்று காலை திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், அம்மா உணவகங்களில் சாப்பிட வந்திருந்த பொதுமக்களிடம் உணவின் தரம் குறித்து கேட்டு விசாரித்தார். பின்னர், அம்மா உணவகங்களில் பணிபுரிபவர்களிடம் சமூக விலகைக் கடைபிடித்து உணவு அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, “நலிவுற்ற மக்களுக்காக கொண்டுவரப்பட்ட அம்மா உணவகத் திட்டம் மூலம் நாள் ஒன்றுக்கு 4.5 லட்சம் பேர் உணவருந்துகின்றனர். ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் உணவு கொடுப்பதற்காக ஜெயலலிதா அம்மா உணவகம் திறந்துவைத்தார். இந்த அம்மா உணவகம் தமிழகம் முழுவது மிகச் சிறப்பாக செயல்பட்டுவருகிறது. இன்றைக்கு வேலைக்குச் செல்கின்றவர்கள் ஏழை மக்கள், மலிவு விலையிலே உணவை வாங்கி உண்பதற்காக ஜெயலலிதா கொண்டுவந்த உண்ணதமான திட்டம் இந்த திட்டம். இன்றைக்கு தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஜெயலலிதா கொண்டுவந்த சிறப்பான திட்டம் என்று அமல்படுத்தியிருக்கிறார்கள். அத்தகைய உண்ணதமான திட்டம் இன்றைக்கு மக்களுக்கு கை கொடுக்கிறது.

இன்றைய தினம் உலகை உலுக்கிக்கொண்டிருக்கிற கொரோனா வைரஸ் தொற்று நோயால் 198 நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்திருக்கின்றன. இந்தியாவில் இந்த கொரோனா வைரஸ் தொற்று நோய் பல்வேறு மாநிலத்தில் பரவியிருக்கிறது. தமிழகத்திலும் பரவியிருக்கிறது. நேற்று இரவு வரை 124 பேர் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

அம்மா உணவகத்தில் உணவுகளை இந்த நேரத்தில் இலவசமாக அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வருகிறது அது பற்றி?

இங்கே இருப்பதே மலிவு விலைதானே. ஒரு இட்லி ஒரு ரூபாய்தானே. இந்தியாவிலேயே ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி கொடுக்கும் நாடு தமிழ்நாடு அதற்கு முன்னுதாரணமாக விளங்கிக்கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் எல்லோரும் அம்மா உணவகத்தைதான் நம்பியிருக்கிறார்கள். வெளியூரிலும் திறந்திருக்கும் ஒரு சில ஓட்டல்களில் விலை அதிகமாக இருப்பதாகக் கூறுகிறார்கள்?

எவ்வளவு உணவு வேண்டுமானாலும் அம்மா உணவகத்தில் அளிக்கச் சொல்லியிருக்கிறேன். ஒரு நாளைக்கு 4.50 லட்சம் பேர் அம்மா உணவகத்தில் உணவு சாப்பிட்டு செல்கிறார்கள். எவ்வளவு வேண்டுமானாலும் உணவு தயாரிப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுக்க அம்மா உணவகத்தின் மூலம் மக்களுக்கு உணவு கிடைப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

அனைத்து உணவகங்களும் மூடப்பட்டுள்ளன. பார்சல்கள் பெறுவோர்கள் மட்டும் பெற்றுக்கொள்ளலாம். உணவகங்கள் எங்கேயும் திறக்கவில்லை. எங்காவது ஓட்டல்கள் திறந்திருந்தால் சொல்லுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்.

ரிசர்வ் வங்கி 3 மாதங்களுக்கு இ.எம்.ஐ வசூலிக்க கூடாது என்று அறிவித்திருக்கிறது. ஆனால், வங்கிகளில் இருந்து இ.எம்.ஐ செலுத்த வேண்டும் என்று நினைவூட்டும் மெசேஜ் அனுப்பப்பட்டிருக்கிறது?

நேற்றைய தினம் எங்களுடைய நிதித்துறை செயலாளரும் ஸ்டேட் பேங்க் உயர் அதிகாரியும் பேட்டி கொடுத்துவிட்டார்கள். வசூல் செய்பவர்களே பேட்டி கொடுத்திருக்கிறார்கள். இது மத்திய அரசு சம்பந்தப்பட்ட பிரச்னையாக இருப்பதால், மத்திய நிதியமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.

நேற்று இரவு உங்கள் இ.எம்.ஐ பிடிக்கப்படும் என்று மெசேஜ் வந்திருக்கிறது?

ஏற்கெனவே தமிழக அரசு தெளிவுபடுத்தியிருக்கிறது. மத்திய அரசும் தெளிபடுத்தியிருக்கிறது. இருந்தாலும், நீங்கள் சொல்வதை கவனத்தில் எடுத்துக்கொண்டு மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும்.

டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று இருக்கிறார்கள். அவர்களில் சிலருக்கு கொரொனா வைரஸ் இருப்பதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 500 பேரை தமிழக அரசு கண்டுபிடித்துவிட்டது. மற்றவர்களை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அவர்களை தனிமைப்படுத்துவதற்கு தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?

நேற்றையதினம் எங்களுடைய சுகாதாரத்துறை செயலாளர் தெளிவுபடுத்தியிருக்கிறார். எல்லா ஊடகங்களிலும் நான் பார்த்தேன். அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் அவர்கள் பேட்டி கொடுத்திருக்கிறார்கள். அந்த மாநாட்டில் கிட்டத்தட்ட 1500 பேர் கலந்துகொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து கிட்டத்தட்ட 1132 பேர் என்று கருதுகிறேன். அவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பி வந்திருக்கிறார்கள். மீதி பேர் டெல்லியிலேயே இருக்கிறார்கள். இதில் கலந்துகொண்டவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 515 பேர் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார்கள். பல்வேறு தகவல்களின் அடிப்படையில் அவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சோதனையில்தான் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் 45 பேர் கொரோனா பாஸிட்டிவ் என்று முடிவு வந்திருக்கிறது. ஏனைய நபர்கள் தாமாக முன்வந்து அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று சொல்லியிருகிறோம். ஏனென்றால், அவர்களுடைய முகவரி முழுமையாக கிடைக்கவில்லை. அவர்களுடைய விலாசம் கிடைக்காத காரணத்தால் நேற்று சுகாதாரத்துறை செயலாளர் ஊடகங்களில் வேண்டுகோள் வைத்திருக்கிறார். இதனால், என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். அவர் பாதிப்பது மட்டுமில்லாமல், அவருடைய குடும்பம் பாதிப்பது மட்டுமில்லாமல் நாட்டிலுள்ள பலபேர் பாதிக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுவிடும். நோயினுடைய தாக்கத்தை அறிந்து தாங்களாக முன்வந்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும். உங்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படும். பலபேர் குணமாகிக்கொண்டிருக்கிறார்கள். ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டால் குணமாவதற்கு வழி இருக்கிறது. அதைத்தான் சுகாதாரத்துறை செயலர் ஊடகத்தின் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியவர்களுக்கு பாதிப்பு இருப்பது போல, 21-ம் தேதி ஈஷாவிலும் கூட கூட்டம் நடந்திருக்கிறது. அந்த கூட்டத்திற்கு பல வெளிநாட்டினர் வந்திருக்கிறார்கள். அதனால், ஈஷா கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கும் ஆய்வுக்கூட்டம் நடத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

ஈஷா கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு அறிகுறி இருந்தால் வாய்ப்பு உள்ளது. இதில் அறிகுறி இருக்கிற காரணத்தினால்தான் சென்று சோதனை நடத்துகிறார்கள். அறிகுறி இல்லாமல் எதையுமே சொல்ல முடியாது. தகவல்களின் அடிப்படையில் சுமார் 4 லட்சம் பேருக்கும் நம்முடைய சுகாதார ஊழியர்கள் ஒரு லட்சம் வீடுகளுக்கு வீடுவிடாக சென்று சோதனை செய்திருக்கிறார்கல். இருமலோ, காய்ச்சலோ, சளியோ இருந்தால் அவர்களுக்கு அறிகுறி இருந்தால் அவர்களை மருத்துவமனையில் சேர்த்து பரிசோதனை செய்கிறோம். பரிசோதனையில் பாஸிட்டிவ் என்றுஇ முடிவு வந்தால் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கிறோம். இது நடைமுறையில் இருக்கிறது. அதனால்தான், திருக்கோயிலானாலும் சரி, தேவாலயங்களானாலும் சரி, பள்ளிவாசல்களானாலும் சரி எல்லா வழிபாட்டு இடங்களும் மூடப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருக்கிறது. மத்திய அரசும் உத்தரவு வழங்கியுள்ளது. ஏனென்றால், அது கூட்டம் அதிகமாகக் கூடும் இடம். அதனால், இந்த தொற்று நோய் பரவிவிடக்கூடும் என்பதால் அனைத்து மதம் சார்ந்த கோயில்களும் மூடப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு மூடப்பட்டுள்ளது. அதனால், அதில் ஏதாவது தகவல் தெரிந்தால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். யாரையும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படமாட்டார்கள் என்று சொல்லமாட்டோம். அதுமட்டுமில்ல, வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் பட்டியலையும் எடுத்துள்ளோம். அவர் வெளிநாட்டவராக இருந்தாலும் சரி, நம்ம நாட்டில் இருந்து வெளிநாடு சென்று திரும்பியிருந்தாலும் சரி, அனைவருமே பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனை அமைக்க அரசியல் கட்சியினர், தனியார்கள் தங்களுடைய இடங்களை தாங்களாகவே முன்வந்து தருகிறார்கள் அதைப்பற்றி?

அந்தளவுக்கு இப்போது இடம் தேவைப்படவில்லை. இப்போது தமிழக அரசே 17000 படுக்கை வசதி செய்து கொடுத்திருக்கிறது. 17000 பேர் நோய்வாய்ப்பட்டோருக்கு மருத்துவ சிகிச்சை செய்யக்கூடிய அளவுக்கு மருத்துவமனை இருக்கிறது. அப்படி ஒரு சூழல்நிலை ஏற்படுகிற அதையும் நாங்கள் பயன்படுத்திக்கொள்வோம்.

ஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா?

மத்திய அரசு ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அறிவித்துள்ளது. அதைப்பற்றி மத்திய அரசுதான் முடிவு செய்யும்.

144 தடை உத்தரவு போரடப்பட்டிருந்தாலும் மக்கள் வெளியே வந்து செல்வது இருந்துகொண்டுதான் இருக்கிறது? ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படவில்லையா?

எல்லாவற்றையும் நீங்களேதான் சொல்கிறீர்கள். அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவில்லை என்கிறீர்கள். 144 தடை உத்தரவு நோய் பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காக போடப்பட்டிருக்கிறது. ஒவ்வொருவருடைய உயிரும் முக்கியம். இதில் எல்லோருமே பங்குகொள்ள வேண்டும். இது தனிப்பட்ட விஷயம் அல்ல. ஊடக நண்பர்கள், பத்திரிகை நண்பர்கள், நான், அமைச்சர்கள், அதிகாரிகள் மருத்துவப் பணியாளர்கள் உள்பட ஒட்டுமொத்த மக்களுமே ஒன்றாக இணைந்து செயல்பட்டால்தான் இந்த கொரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்த முடியும். பரவுவதை தடுக்க முடியும். தனி ஒருவரால் முடியாது. அரசாங்கம் சட்டம் போடலாம். அந்த சட்டத்தை மக்கள் மதித்து நடக்க வேண்டும். இதை ஓவ்வொருவருமே உணர வேண்டும். இந்த நோயின் தாக்கம் பற்றி தெரியாமலேயே சிலர் வெளியே பரவலா வெளியே சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த நோய்வாய்ப்பட்டவர்கள் எவ்வளவு துன்பப்படுகிறார்கள் என்பதை ஊடகத்தினருக்கு தெரியும் இன்றைக்கு வெளிநாட்டில் பலர் இந்த நொயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் துடிதுடிக்கும் காட்சிகளை எல்லாம் பார்க்கிறோம். வெளிநாடுகளில் 42,000 பேர் இறந்துவிட்டதாக ஊடங்களில் செய்திகளைப் பார்க்கிறோம். நாள்தோறு ஆயிரக்கணக்கானோர் இறக்கின்ற இந்த சூழலில் ஒவ்வொரு உயிரும் அரசுக்கு மிக முக்கியம். அதன் அடிப்படையில்தான் 144 தடை உத்தரவு போட்டிருக்கிறோம். பிரதமர் நரேந்திர மோடியும் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் இதை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள். அதே போல, தமிழக அரசும் மக்களுக்கு தேவையான வசதியையும் செய்து கொடுக்க வேண்டும். மக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய வேண்டுகோள்.

விவசாயிகளுக்கு எந்தவித தடையும் இல்லை என்று அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அறுவடை செய்வது உள்ளிட்ட வேளாண்மைப் பணிகளை மேற்கொள்வதற்கு எந்த தடையும் இல்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close