தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில், நீட் தேர்வு பற்றிய விவாதத்தின்போது, நீட் தேர்வை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்தபோது, காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்ததா இல்லையா என்று முதல்வர் பழனிசாமி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, தமிழக சட்டப் பேரவைக் கூட்டம், சென்னை கலைவாணர் அரங்கத்தில் 3 நாள் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. செப்டம்பர் 14ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன், காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் உள்ளிட்டோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதையடுத்து, சட்டப் பேரவைக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, தமிழகத்தில் செப்டம்பர் 12ம் தேதி நீட் தேர்வு அச்சம் காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு தமிழகத்தில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இதனால், சட்டப் பேரவையில் மாணவர்களின் மரணத்துக்கு இரங்கள் தீர்மானம் நிறைவேற்றவில்லை என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். மேலும், நீட் தேர்வு பற்றி சட்டப் பேரவையில் விவாதம் நடத்தப்படும் என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து, தமிழக சட்டப் பேரவையின் இரண்டாவது நாள் கூட்டம் இன்று (செப்டம்பர் 15) நடைபெற்றது. பேரவையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வுக்கு எதிரான கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசினார். அப்போது, மு.க.ஸ்டாலின், “அரியலூர் அனிதா முதல், இன்று திருச்செங்கோடு மோதிலால் வரை, பல மாணவ மாணவிகள் நீட் தேர்வுக்குப் பயந்து தற்கொலை செய்து கொண்டு மாண்டிருக்கிறார்கள். அதனால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அனைவருமே தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம்.
இதே சட்டப் பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு அளிக்கக் கோரி இந்த அவையில் இரு மசோதாக்களை நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் அனுமதிக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், இந்த அவையின் உணர்வுகளை மத்திய அரசு கிஞ்சித்தும் மதிக்கவில்லை. அனுப்பிய மசோதாக்களுக்கு இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை.
செப்டம்பர் 12ம் தேதி நீட் தேர்வுக்கு முதல் நாள் மட்டும் ஒரே நாளில் மதுரை ஜோதி ஸ்ரீ துர்கா, தர்மபுரி ஆதித்யா, திருச்செங்கோடு மோதிலால் என மூன்று மாணவ - மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.
‘I am sorry. I am tired’ என்று மதுரையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் குரல் ஒட்டுமொத்த தமிழக மாணவர்களின் குரல் என்பதை மத்திய அரசு ஏற்க மறுக்கிறது.
இதனிடையே, செப்டம்பர் 13ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் எண்ணிப் பார்க்க முடியாத அடக்குமுறைகள், கெடுபிடிகள் நடந்திருக்கிறது. புதுமணத் தம்பதியின் தாலியைக் கழற்றி வைத்து விட்டுத் தேர்வு எழுதுங்கள் என்ற கொடுமை நெல்லையில் நடைபெற்றுள்ளது. பசிக் கொடுமையால் மாணவிகள் மயங்கி விழுந்துள்ளார்கள். அடிப்படை வசதிகள் இன்றி பெற்றோரும், தேர்வு எழுதப் போன மாணவர்களும் தவித்துள்ளார்கள்.
இந்தி வழிகாட்டுதல்கள்- மதுரை தேர்வு மையங்களில் தலைதூக்கி - தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழுக்குப் பதில் ஆங்கிலக் கேள்வித்தாள் கொடுத்து சில மையங்களில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் இப்படியொரு கொடுமையான நீட் தேர்வு தேவையா?
ஆகவே தமிழகச் சட்டமன்றத்தையும் - தமிழக மாணவர்களின் உணர்வுகளையும் மதிக்காத - நீட் தேர்வை இதுவரை ரத்து செய்யாத மத்திய அரசை எதிர்த்தும், நீட் தேர்வை ரத்து செய்ய அ.தி.மு.க. அரசு கேட்கவில்லை என்று கூறியுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களைக் கண்டித்தும் கண்டனத் தீர்மானம் நாம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
பிளஸ்-டூ மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மருத்துவக் கல்வியில் சேர்க்கை நடைபெறுவதை அரசு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் உறுதுணயாக இருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று மு.க.ஸ்டாலின் பேசினார். மேலும் அவர், கருணாநிதி உயிருடன் இருக்கும் வரை தமிழகத்தில் நீட் தேர்வு கொண்டுவரப்படவில்லை என்று தெரிவித்தார்.
மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு ஆவேசமாக பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “நீட் தேர்வை யார் கொண்டுவந்தது. நீட் தேர்வை கொண்டுவந்தவர்கள் யார் இங்கே எல்லோருக்கும் தெரியும். நீட் தேர்வு கொண்டுவந்தபோது மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் திமுக கூட்டனியில் இருந்ததா? இல்லையா? எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகனை சொல்லச் சொல்லுங்கள். இதை மறுக்க முடியுமா? நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து போராடியது தமிழக அரசு. அதை எதிர்த்து வாதாடியது யார், அதனால், நீட் தேர்வு குறித்து பேச திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் தகுதி கிடையாது. நீட் தேர்வு பயத்தால் 13 பேர் தற்கொலை செய்துகொண்டதற்கு காரணம் திமுகதான். நாட்டைக் குட்டிச்சுவாராக்கியது திமுகதான்” என்று கடுமையாக பேசினார்.
இந்த விவாதத்தின்போது, ராதாபுரம் எம்.எல்.ஏ இன்பதுரை, “நீட் தேர்வுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம்தான் வாதாடினார். வரலாற்றை மாற்ற முயற்சிக்காதீர்கள்” என்று கூறினார். இதற்கு, சட்டப் பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள். சட்டப் பேரவைத் தலைவர் தனபால் அவர்களை அமைதியாக இருக்கும்படி கூறினார். ஆனால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சட்டப் பேரவைக் கூட்டத்தில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.