அதிமுக ஆட்சி கவிழும் என்கிற கனவு, கானல் நீர் : எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சி கவிழும் என்கிற கனவு, கானல் நீர் என சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

அதிமுக ஆட்சி கவிழும் என்கிற கனவு, கானல் நீர் என சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

அதிமுக ஆட்சி விரைவில் கவிழும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் பேசி வருகின்றனர். குறிப்பாக 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிப்பு விவகாரத்தில் தீர்ப்பு வந்ததும் ஆட்சி கவிழும் என்றும், 6 மாதங்களில் திமுக ஆட்சி அமையும் என்றும் ஸ்டாலின் நேற்று ஒரு விழாவில் குறிப்பிட்டார்.

அதிமுக கட்சி பிரமுகர் இல்ல விழா ஒன்றில் இன்று அதற்கு பதில் அளித்தார் முதல்வர் எடப்பாடி க.பழனிசாமி. சேலம் மாவட்டம் ஆத்தூர் நகர அ.தி.மு.க. செயலாளர் மோகன். இவரது மகள் அக்‌ஷயாவுக்கும், நாமக்கல் பொன்விழா நகரைச் சேர்ந்த சுகுமார்- கமலேஸ்வரி ஆகியோரின் மகன் முத்து பாண்டிக்கும் திருமணம் இன்று காலை ஆத்தூர் அம்மம்பாளையத்தில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் நடந்தது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த திருமணத்தை நடத்தி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது : ஆத்தூர் நகர செயலாளர் மோகன் கழகத்தில் ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை கட்சிக்கு விசுவாசமாக இருந்து இந்தளவிற்கு உயர்ந்திருக்கிறார். கடுமையான உழைப்பாளி அவர். அவரது இல்லத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வது எனக்கு பெருமையாக இருக்கிறது.

அம்மாவின் மறைவிற்கு பிறகு ஆட்சி கவிழ்ந்து விடும். கட்சி உடைந்து விடும் என கனவு கண்டார்கள். அவர்களது கனவு கானல் நீரானது. புரட்சித்தலைவர் உருவாக்கிய கட்சியை கண்ணை இமைக்காப்பது போல புரட்சி தலைவி காத்து வந்தார். அவரது மறைவிற்கு பிறகு கடந்த ஓராண்டாக நடந்து வரும் அம்மாவின் ஆட்சியில் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

பணிக்கு செல்கின்ற பெண்கள் உரிய நேரத்தில் அந்த இடத்திற்கு செல்லும் வகையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. அம்மாவின் ஆட்சியில் திருமண உதவி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏழை மக்கள் பலன் பெற்றுள்ளனர். அ.தி.மு.க. அரசு மக்களுக்கான அரசு, மக்களின் அரசு. மக்களின் தேவைகளை நிறைவேற்றும் அரசு. இது அம்மாவின் அரசு. இவ்வாறு அவர் பேசினார்.

சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: உச்சநீதிமன்ற உத்தரவின் படி 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். மத்திய அரசும் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்.

காவிரி நதிநீர் பங்கீடு தீர்ப்பில் தமிழகத்திற்கு தண்ணீரின் அளவை குறைத்துள்ளது ஏமாற்றம் அளிக்கிறது. உச்சநீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பில் பல்வேறு சாதகமான அம்சங்கள் இடம் பெற்று ள்ளதை வரவேற்கிறேன். தமிழகத்தில் பாசன வசதி பெறும் பரப்பு 24 ஆயிரத்து 708 லட்சம் ஏக்கர் என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி உறுதி செய்யப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்வது குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

ஓராண்டாக எதிர்கட்சிகளின் விமர்சனங்களை தாண்டி சரியான பாதையில் ஆட்சி செய்து வருகிறோம். ஆட்சியை கலைக்க வேண்டும் என்று எண்ணியவர்களின் கனவு கானல் நீரானது. இவ்வாறு அவர் கூறினார்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close