திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, எஸ்.வி.சேகர் தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. அவர் ஏதாவது பேசிவிட்டு வழக்கு வந்தால் போய் ஒளிந்துகொள்வார் என்று கூறினார்.
திண்டுக்கல்லில் அரசு திட்டங்களைத் தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் தொழில் துறையினருடன் ஆலோசனை நடைத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழக அரசின் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்த புள்ளிவிவரங்களை தெரிவித்து விவரித்தார். மேலும், திண்டுக்கல்லில்கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருவதாகக் கூறினார். கொரோனா பரவலைத் தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று வலியுறுத்தினார்.
அப்போது செய்தியாளர்கள், இருமொழிக் கொள்கை பற்றி அரசின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, “ஏற்கனவே நான் சொல்லிவிட்டேன். ஊடகங்களும் அதனை செய்தியாக வெளியிட்டுவிட்டார்கள். பேரறிஞர் அண்ணா கண்ட கனவு, எம்.ஜி.ஆர். அம்மா (ஜெயலலிதா) கண்ட கனவு இருமொழிக் கொள்கை. தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும். அதற்கான அறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டிருக்கிறது” என்று கூறினார்.
தமிழகத்தில் பருவமழை பெய்து வருகிறது அதற்காக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலத்த முதல்வர் பழனிசாமி, “நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. உள்ளாட்சித் துறை அமைச்சரும் கால்நடைத்துறை அமைச்சரும் அங்கே சென்றுள்ளார்கள். மக்களுக்கு நிவாரணங்களை வழங்க உத்தரவிடப்பட்டிருக்கிறது.” என்று தெரிவித்தார்.
இதையடுத்து, திமுகவில் கு.க.செல்வம் பாஜகவில் சேர உள்ளதாக வெளியாகும் தகவல் குறித்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, அது திமுகவின் உட்கட்சி பூசல். அதைப் பற்றி கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து, அண்மையில் நடிகர் எஸ்.வி.சேகர் வெளியிட்ட வீடியோவைக் குறிப்பிட்ட செய்தியாளர்கள் தங்களுக்கு இந்தி தெரியும் என்று கூறியது குறித்து கருத்து கேட்டனர்.
இந்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, எங்களுக்கு இந்தி தெரியும் என்று அவருக்கு எப்படி தெரியும். அவருக்கு இந்த ஞானோதயம் எப்படி ஏற்பட்டது. அவர் முதலில் எந்த கட்சியைச் சேர்ந்தவர். அவர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர் என்றால் தேர்தல் பிரசாரத்துக்கு வரவே இல்லையே. அதிமுக எங்களுடைய கூட்டணியில் இடம் பெற்றிருக்கக் கூடிய பாஜக எல்லாம் நாங்கள் நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தோம். அப்போது அவர் எங்கேயுமே அவர் பிரசாரத்துக்கு வரவே இல்லை. அதுமட்டுமில்லை அவர அதிமுகவில் இருந்தார். அதிமுகவில் இருந்து அதிமுகவை புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார். அவர் சரியான முறையில் கட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்ற காரணத்தினால்தான் அவர் அதிமுகவில் இருந்து அம்மாவால் நீக்கப்பட்டார். அவர் கட்சியில் இருந்து வெளியேறினார். அதனால் அவருகெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவரை நான் பெரிய கட்சித் தலைவராக நான் நினைக்கவில்லை. அவர் ஏதாவது பேசுவார். பேசிவிட்டு வழக்கு வந்தால் போய் ஒளிந்துகொள்வார். அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு சென்றுள்ள நயினார் நாகேந்திரன் மீண்டும் அதிமுகவுக்கு வந்தால் சேர்த்துக்கொள்வோம்” என்று கூறினார்.
ராமர் கோயில் பற்றி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, “ராமர் கோயில் இன்றைக்கு நேற்றைக்கு வந்த பிரச்னை இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. நீதி மன்ற உத்தரவின்படி மத்திய அரசு செயல்படுகிறது” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.