எடப்பாடி பழனிசாமி மீது ஊழல் புகார்: லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கோர்ட் உத்தரவு

CM Edappadi K Palaniswami and Tamil Nadu Highways Department Scam: முதல்வர் எடப்பாடி க.பழனிசாமியின் வசம், நெடுஞ்சாலைத் துறை உள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யும்படி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி க.பழனிசாமியின் வசம், நெடுஞ்சாலைத் துறை உள்ளது. இந்தத் துறையில் சாலை அமைக்கும் பணிகளில் உறவினர் மற்றும் பினாமி நிறுவனங்களுக்கு டெண்டர் ஒப்பந்தங்கள் வழங்கியதில் சுமார் 4800 கோடி முறைகேடு செய்ததாக கூறி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் இன்று (செப்டம்பர் 12) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், புகார் மீதான ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை சீல் வைக்கப்பட்ட கவரில் தாக்கல் செய்தார்.

தொடர்ந்து அவர், முதல்வரின் உறவினர்கள் 1991 முதல் இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் அரசின் ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். முதல்வரின் மகன் என்ற காரணத்திற்காக அவருக்கு அரசு ஒப்பந்தங்களை பெற தகுதி இல்லையா எனவும் அரசு தலைமை வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.

‘உலக வங்கி கண்காணிப்பில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டங்களுக்கு ஒப்பந்ததாரர்களுக்கு கூடுதல் தொகை ஏதும் ஒதுக்கப்படவில்லை என்றும் இந்த பணிகளை உலக வங்கி கண்காணிப்பில் நடைபெறுகின்றது. எனவே மனுதரார் புகார் தவறானது.

திட்டத்திற்கான தொகை உயர்த்தபட்டுள்ளதான குற்றச்சாட்டு தவறானது. நிறைவு செய்யப்பட்ட பணிகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை தான் பணம் வழங்கப்படும். அதனையும் உலக வங்கி கண்காணிக்கும். எனவே மனுதாரர் குற்றச்சாட்டு தவறானது’ என அரசு தலைமை வழக்கறிஞர் வலியுறுத்தி வாதிட்டார்.

திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ‘லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனரகம் முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் வருவதால் இந்த விசாரணை எப்படி நியாயமாக இருக்கும்?’ என கேள்வி எழுப்பியதுடன், இந்த புகார் குறித்து சிறப்பு புலன் விசாரணை குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என பதில் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் நெடுஞ்சாலை திட்டங்களில் உலக வங்கியின் விதிகளை மீறி முதல்வரின் உறவினருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முதல்வர் மற்றும் துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீது 4 முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்கள் தரப்பை விசாரணைக்கு கூட அழைக்கவில்லை என வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘உறவினர்களுக்கு அரசு ஒப்பந்தங்கள் வழங்கிய குற்றச்சாட்டு குறித்து நடத்தப்பட்ட விசாரணை என்ன? ஒப்பந்த ஒதுக்கீடு முறைகேடுகள் குறித்த விசாரணையின் நிலை என்ன? லஞ்ச ஒழிப்பு துறையில் உள்ள பொறியாளரைக் கொண்டு டெண்டர் ஒப்பந்த புள்ளிகள் விலை நிர்ணயம், தொழில்நுட்ப தகுதிகள் குறித்து விசாரணை செய்யப்பட்டதா?’ என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த அரசு தலைமை வழக்கறிஞர், ‘நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி அது தொடர்பான விபரங்களை வரைவு அறிக்கையாக ஊழல் கண்காணிப்பு இயக்குனருக்கு அளித்துள்ளோம். அதன் மீது அவர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைக்கு அது தொடர்பான சீலிடப்பட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்வதாக கூறிய தலைமை வழக்கறிஞர், அதனை நீதிமன்றத்தில் அளித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, புகார் மீது அன்றாடம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை சீல் வைக்கப்பட்ட கவரில் வரும் 17 ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தார்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close