திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி பட்டியலினத்தவரை இழிவாக பேசியதால் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லை, ஆனால், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அரசின் மீது அவதூறான அறிக்கை வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.
சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: இன்றைய தினம் சேலம் மாவட்டத்தில் கொரோன வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நிவாரணம் வழங்கப்பட்டது குறித்தும் சேலம் மாவட்டத்தில் நிலவிவரக் கூடிய பிரச்னைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
கோடைக்காலமாக இருப்பதால் ஆங்காங்கே குடிநீர் பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதே போல அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என்று ஏற்கெனவே அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின்படி அரசு அறிவித்த நலத்திட்ட உதவிகள் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் மக்களுக்கு தடையில்லாமல் சென்று கிடைத்திருக்கின்றன.
அரசு அறிவித்த நலத்திட்டங்களை மாவட்ட நிர்வாகம் சரியாக நடைமுறைப்படுத்தியதன் விளைவு, சேலம் மாவட்டம் இன்று கொரோனா இல்லாத மாவட்டமாக பார்க்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை 35 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
சேலம் மாவட்டத்தில் 14,223 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 35 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.
வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களில் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,539 பேர். அதில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவரகள் 14 பேர். இன்றைக்கு பொது மருத்துவமனையில் அந்த 14 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெளிமாவட்டத்தில் இருந்து சேலம் மாவட்டத்திற்கு வந்தவர்கள் 1,891 பேர். அதில் 7 பேருக்கு நோய் அறிகுறி கண்டறியப்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். மீதமுள்ள 6 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதனால், சேலம் மாவட்டத்தைப் பொருத்த வரைக்கும் மாவட்டத்தில் இருக்கக் கூடிய ஒருவருக்குகூட தற்போது நோய்த்தொற்று இல்லை. நோய்த்தொற்று ஏற்பட்ட 35 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பியிருக்கிறார்கள். வெளிமாநிலத்தில் இருந்து, வெளி மாவட்டத்தில் இருந்து வந்தவர்களுக்குதான் இப்போது சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கிறோம்.
தமிழகத்தைப் பொருத்தவரை, 3,85,185 பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. 3,67,939 பேருக்கு
இதுவரை, பரிசோதனை மூலம் கொரோனா வைரஸ் இருப்பதாக கண்டறியப்பட்ட நபர்களின் எண்ணிக்கை, 14,753 பேர். தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 7524 பேர். மற்றவர்கள் எல்லாம் குணமடைந்து வீடு திரும்பிவிட்டார்கள். இதில் 98 பேர் இறந்துள்ளனர்.
நம்முடைய மாநிலத்தில் 67 பரிசோதனை நிலையங்கள் இருக்கிறது. இதில் அரசு பரிசோதனை நிலையங்கள் 41 தனியார் பரிசோதனை நிலையங்கள் 26. நாள் ஒன்றுக்கு சுமார் 12 ஆயிரம் பேர்களில் இருந்து 13 ஆயிரம் பேர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.
இதில் வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 719 பேர்.
தமிழகத்தைப் பொருத்தவரை இந்த கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அனைத்து வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதற்காக மருத்துவ நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டு அந்த நிபுணர்கள் குழு பரிந்துரைகளின்படி, நோய் பரவலைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நடவடிக்கையில், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையைச் சேர்ந்தவர்கள், உள்ளாட்சித்துறையைச் சேர்ந்தவர்கள், கூட்டுறவுத்துறையைச் சேர்ந்தவர்கள் என பிற துறையைச் சேர்ந்தவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டதன் விளைவு இன்று கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் நாம் நிலை நிறுத்தியிருகிறோம்.
தமிழகம் முழுவதும் கோடைக்காலமாக இருப்பதால், தமிழகம் முழுவது எங்கேயும் குடிநீர் பிரச்னைகள் ஏற்படக்கூடாது என்பதற்காக, அரசு இன்றைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எங்கெல்லாம் குடிநீர் பிரச்னை இருங்கிறதோ அந்த இடமெல்லாம் கண்டறியப்பட்டு, உடனுக்குடன் மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு அதனடிப்படையில் அரசு அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள்.
குடிமராமத்து திட்டம்
அதே போல குடிமராமத்து திட்டம். இன்றைக்கு, கோடைக் காலமாக இருப்பதால், அரசு அறிவித்த குடிமராமத்து திட்டத்தை தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த குடிமராமத்து திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் துவக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதே போல டெல்டா மாவட்டங்களில் இன்றைக்கு தூர்வாரும் பணி துவங்கப்படுகிறது. தண்ணீர் திறந்துவிடப்படுகிறபோது டெல்டா பகுதிகளில் கடைமடைகளில் இருக்கக்கூடிய விவசாயிகளுக்குகூட தங்கு தடையில்லாம சென்று சேர வேண்டும் என்ற அடிப்படையில் அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கென்று தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
பொது விநியோகமுறைத் திட்டத்தில் இன்றைக்கு சரியான முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்ட காரணத்தினால் அனைத்து மக்களுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் சென்று சேர்ந்திருக்கிறது. சுமார் 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கியிருக்கிறோம். ஒவ்வொரு குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் வழங்கியிருக்கிறோம். அதே போல அமைப்புசாரா தொழிலாளர்கள் 36 லட்சம் பேருக்கு தலா 2000 ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு விலையில்லா அரசி, பருப்பு, எண்ணெய் வழங்கப்பட்டிருக்கிறது. வெளிமாநிலத்தில் இருந்து வந்த பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் விலையில்லா அரிசி, பருப்பு, எண்ணெய் வழங்கப்பட்டிருக்கிறது. அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று சொன்னால் அவர்களையெல்லாம் கணக்கெடுத்து பதிவு செய்து அவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறோம்.
சேலம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 14,800 பேர் வெளிமாநிலத்தவர் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில், சுமார் 8,600 பேர் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வதாக விருப்பம் தெரிவித்தார்கள். இதுவரை 2,250 பேர் வெளி மாநிலத்திற்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தொடர்ந்து அவர்கள் செல்வதற்கு ரயில் பயணம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சிறு குறு தொழில்கள் புறநகர் பகுதிகளில் செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவு வழங்கப்பட்டு அந்த பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெரிய தொழில் நிறுவனங்களில் குறிப்பிட்ட தொழிலாளர்களுடன் பணியைத் துவங்கலாம் என்று உத்தரவு வழங்கப்பட்டு அந்த பணிகளும் இன்றைக்கு துவங்கப்பட்டுள்ளது.
வேளாண் பணிகளைப் பொருத்தவரை இன்றைக்கு முழுமையாக செயல்பாட்டிற்கு வந்திருக்கிறது. அதற்கு எந்தவித இடையூறுகளும் கிடையாது.
அதே போல, இன்றைக்கு ஆட்டோ ஓட்டுவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. எல்லாமே மத்திய அரசின் வழிகாட்டுதலின்படியும், மருத்துவர்களின் பரிந்துரையின்படியும்தான் அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
முடித்திருத்தம் நிலையங்கள், அழகு நிலையங்கள் வைத்த கோரிக்கைகளின் படி, அரசு வகுத்துள்ள வழிமுறைகளைப் பின்பற்றி நடந்துகொள்ள வெண்டும் என்று அனுமதி வழங்கியுள்ளோம்.
பொதுமக்களைப் பொருத்தவரை அரசு அறிவித்த வழிக்காட்டுதல்களின்படி செயல்பட வேண்டும். வெளியிலே செல்கின்றபோது முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். பொருள்களை வாங்குகின்றபோது இடைவெளிவிட்டு வாங்க வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். வெளியிலே சென்றுவிட்டு வீடு திரும்புகின்றபோது கை, கால்களை சுத்தமாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். இதைக் கடைப்பிடித்தாலே நாம் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முடியும்.
இது கண்ணுக்கு தெரியாத ஒரு வைரஸ். இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக் கூடியது. ஆக பொதுமக்கள் கட்டுப்பாட்டோடு இருந்தால்தான் இந்த நோய் பரவலைத் தடுக்க முடியும். இதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இன்றைக்கு ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவருடைய கட்சியைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதற்காக என் மீதும் அரசு மீதும் குற்றம் சாட்டி ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இது வேடிக்கையாக இருக்கிறது. ஏனென்றால், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களை விமர்சனம் செய்த காரணத்தினால், அந்த மக்களை இழிவுபடுத்தி பேசியதாக கருதிய காரணத்தினால், மதுரையைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் ஆதித்தமிழர் மக்கள் கட்சியைச் சேர்ந்தவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் 12.03.2020 அன்று புகார் செய்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த சட்டத்தின் மூலமாகத்தான் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அரசுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதனால், வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறான பிரசாரம் செய்கிறார்கள். அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்று ஒரு பொய்யான அவதூறான பிரசாரத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பரப்புகிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒரு தனிப்பட்ட நபர் ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்திப் பேசுகின்றபோது அவர் புகார் செய்கிறார். அந்த புகாரின் அடிப்படையிலேயே காவல்துறை கைது செய்கிறது. இதற்கும் அரசுக்கும் என்ன சம்பந்தம்? இதற்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன சம்பந்தம். இதையெல்லாம் வேண்டும் என்றே திட்டமிட்டு பொய்யான அவதூறு பிரசாரம் செய்து ஸ்டாலின் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். இது வன்மைஅயக கண்டிக்கத்தக்கது.
ஒரு எதிர்க்கட்சி தலைவர் என்றால், இது போல இழிவான பேச்சை பேசிய உடனே அவருடைய கட்சியைச் சேர்ந்தவரை கண்டித்திருக்க வேண்டும். இதுதான் ஒரு எதிர்க்கட்சித் தலைவருக்கு அழகு. அதைவிட்டுவிட்டு மற்றவர்கள் மீது பழி சுமத்தி தப்பித்துக்கொள்வது எந்தவிதத்தில் நியாயம் என்பது பொது மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஏதோ இந்த ஆர்.பாரதி மிகப்பெரிய விஞ்ஞானி மாதிரி, அவர் என் மீது ஊழல் புகார் கொடுத்தார் என்றும் அதற்காக அவரை கைது செய்ததாகவும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இதற்கு அதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. அவர் என்ன ஊழல் புகார் கொடுத்துள்ளார். ஏதோ ஒரு பேர்ப்பர்ல எழுதி ஊடகங்களில் பரபரப்பு செய்தி வரவேண்டும் என்று கொடுத்திருக்கிறார். ஊடக நண்பர்களும் விசாரித்துவிட்டு அந்த செய்தியை வெளியிடுங்கள். ஒரு புகார் கொடுத்தால் உடனே போட்டுவிடக் கூடாது. பத்திரிகையில் வெளியிடக் கூடாது. அதில் என்ன உண்மைத் தன்மை இருக்கிறது என்று ஊடக நண்பர்களும் பத்திரிகை நண்பர்களும் ஆய்வு செய்து வெளியிட்டால் நன்றாக இருக்கும்.
மக்களுக்கு உண்மை நிலை தெரிய வேண்டும். வேண்டுமென்றே இவர்கள் அரசியல் நாடகம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். ” இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.