குடும்பங்களை சீரழிக்கிறதா பிக் பாஸ்? முதல்வர் பழனிசாமி – கமல்ஹாசன் மோதல்

கமல்ஹாசன் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கமல்ஹாசன் குடும்பங்களை சீரழித்து வருகிறார் என்று முதல்வர் பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

By: Updated: December 17, 2020, 11:15:50 PM

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கமல்ஹாசன் குடும்பங்களை சீரழித்து வருகிறார் என்று முதல்வர் பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், தென் மாவட்டங்களில் தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறார். தனது பரப்புரைகளில் கமல்ஹாசன் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார்.

இந்தநிலையில், முதல்வர் பழனிசாமி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வுக் கூட்டம் மேற்கொண்டார். ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, “தமிழக அரசு ஏழை எளிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் பொதுமக்கள் அரசை தேடி தங்கள் குறைகளை சொல்வதற்கு பதிலாக அரசாங்கமே மக்களை தேடிச் சென்று அவருடைய குறைகளை தீர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் என்று அறிவித்து தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.

அரியலூர் மாவட்டத்திலும் சிறப்பு முதல்வர் குறைகேட்பு முகாம்களை நடத்தினார்கள். அந்த முகாம்களில் 30 ஆயிரத்து 422 மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்கள் எல்லாம் ஆய்வு செய்யப்பட்டபொழுது அந்த ஆய்வில் 20 ஆயிரத்து 53 மனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளன. எஞ்சிய மனுக்கள் தகுதி இல்லாத காரணத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

ஆய்வுக் கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள், மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் தமிழக அரசின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, “70 வயதில் அரசியலுக்கு வந்து பிக்பாஸ் நடத்திக்கொண்டிருக்கிறார். பிக்பாஸ் நடத்துகிறவர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்தால் எப்படி இருக்கும்? அதை பார்த்தால் ஒரு குடும்பம்கூட நல்லா இருக்காது. இப்படிப்பட்ட தலைவர்கள் சொல்கிற கருத்தை நீங்கள் சொல்லலாமா? பிக் பாஸ் விஜய் தொலைக்காட்சியில் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதில் என்ன இருக்கிறது? நீங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம். நல்ல கேள்வியாக கேளுங்கள். அவர் நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதாக இல்லை. நல்ல குடும்பத்தை கெடுப்பது தான் அவருடைய வேலை. அந்த டிவி தொடரை பார்த்தால் குழந்தைகளும் கெட்டுப்போய்விடும். நல்லா இருக்குற குடும்பமும் கெட்டுப்போய்விடும். டிவியில் காட்டுவதற்கு ஆக்கபூர்வமாக எத்தனையோ திட்டம் இருக்கிறது. நதிகள் இணைப்பு, புதியதாக விவசாயிகள் செய்கிற பண்ணை திட்டம், என்னென்ன புதுசாக கண்டுபிடித்திருக்கிறார்கள் என்று காட்டாலம். மாணவர்களுக்கு நல்ல அறிவுரைகளைக் காட்டலாம்” என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து, முதல்வர் பழனிசாமிக்கு பதிலளிக்கும் விதமாக மநீம தலைவர் கமல்ஹாசன், “முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

இந்த ட்வீட்டைத் தொடர்ந்து, “சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும்

ஊரார் கால் பிடிப்பார்..

ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை

அவர் எப்போதும் வால் பிடிப்பார்.

`எதிர் காலம் வரும் என் கடமை வரும்.

இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்” என்ற எம்.ஜி.ஆர் பாடல் வரிகளை கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, இன்று திமுகவின் ஆன்லைன் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த பாடல்வரிகளைக் கூறி ஆளும் கட்சியை விமர்சித்திருந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Cm edappadi k palniswami says kamal haasans bigg boss spoiled families

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X