தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு 10 நாள்கள் அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அவர் இல்லாத நாட்களில், அவரது அதிகாரங்கள், துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் வசம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வரின் வெளிநாட்டுப் பயண விவரம் தொடர்பான அறிவிப்பினை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணம் வரும் 28ம் தேதி முதல் 10 நாள்கள் அமெரிக்கா உள்பட மூன்று நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 28ம் தேதி முதல்வர் பழனிச்சாமி சென்னையில் இருந்து புறப்பட்டு இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டன் செல்கிறார். அங்கு மருத்துவர்கள் மருத்துவ மேம்பாடு குறித்த பணிகளை கண்டறிந்து அதனை தமிழகத்தில் செயல்படுத்தும் வகையில் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். முதல்வருடன் அமைச்சர் விஜய பாஸ்கர், ஆர்பி உதயக்குமார், ஆகியோர் செல்கிறார்கள்.
இங்கிலாந்தில் இருந்து செப்டம்பர் 1ம் தேதி அமெரிக்கா புறப்பட்டு செல்லும் முதல்வர் பழனிச்சாமி அங்குள்ள நியூயார்க் நகருக்கு செப்டம்பர் 2ம் தேதி சென்றடைகிறார். அங்கு அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் கூட்டமைப்பினர் மற்றும் அமெரிக்க தொழில் முனைவோர் பிரதிநிதிகளை சந்திக்கும் நிகழ்ச்சிகளில பங்கேற்கிறார். அத்துடன் அமெரிக்க வாழ் தமிழர்களை சந்தித்து முதல்வர் கலந்துரையாடும் நிகழ்ச்சியும் இந்த பயணத்தில் இடம் பெற்றுள்ளது.
அமெரிக்காவிலிருந்து செப்டம்பர் 7ம் தேதி புறப்படும் முதல்வர் துபாய் சென்று அங்கு செப்டம்பர் 8 மற்றும் 9ம் தேதிகளில் தொழில் முனைவோரை சந்திக்கும் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பின்னர் வரும் 10ம் தேதி தமிழகம் திரும்புகிறார்.
இந்த வெளிநாட்டு பயணத்தில் பல்வேறு முக்கிய நபர்களையும், தொழில் முதலீட்டாளர்கள் உள்ளிட்டோரையும் முதல்வர் சந்திக்க உள்ளார். குறிப்பாக தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து புரிந்துணர்வு ஒப்பந்தகள் மேற்கொள்ளப்பட உள்ளன. முதலீட்டை ஈர்ப்பதே முதல்வரின் வெளிநாட்டு பயணத்தின் நோக்கம் என ஏற்கனவே தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.