18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கில், சென்னை உயர்நிதிமன்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன், 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கிய சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்றும், சபாநாயகர் முடிவில் தவறு இல்லை என்றும், தகுதிநீக்கம் சட்டவிரோதமானது இல்லை எனவும் தீர்ப்பளித்தார்.
தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்தார். டிடிவி தினகரன் தரப்பினருக்கு இந்த தீர்ப்பு பின்னடைவாக கருதப்படுகிறது.
அதே நேரத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் தரப்பில் விரைவில் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு உள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த டிடிவி தினகரன், "தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும்" என்றார்.
இந்நிலையில், இத்தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த முதல்வர் பழனிசாமி, "எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் இறைவனின் நல்லாசியால் நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது.
எப்போது இடைத்தேர்தல் அறிவித்தாலும், அதனை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது. ஆனால், தேர்தல் ஆணையம் தான் தேர்தல் குறித்து அறிவிக்க வேண்டும். தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் நடத்தினால் அதிமுக அனைத்து தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றிபெறும்" என்றார்.
தொடர்ந்து பேட்டியளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், "தேர்தல் ஆணையம் எப்போது தேர்தல் அறிவித்தாலும் சந்திக்க தயார்" என்று தெரிவித்துள்ளார்.
சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், "ஜெயலலிதாவின் ஆட்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. துரோகிகளுக்கு சரியான பாடம் புகட்டப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.