முதல்வர் பழனிசாமி பேட்டி : பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இன்று சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது தம்பிதுரை, அமைச்சர் ஜெயகுமார், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
பிரதமரை சந்தித்த பின் முதல்வர் பழனிசாமி பேட்டி
சந்திப்பிற்கு பிறகு செய்தியார்களிடம் பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, "முன்னாள் முதல்வர்கள் அறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்க வேண்டும். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்ட வேண்டும்" என வலியுறுத்தப்பட்டது.
மேலும், மதுரை தோப்பூரில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை விரைவில் வழங்க வேண்டும். மேலும், தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்காமல் நிலுவையில் உள்ள மத்திய அரசின் நிதியை விரைவாக விடுக்க வேண்டும்.
சென்னை மாநகர நிரந்தர வெள்ளத்தடுப்பு மையம் அமைக்க தேவையான ரூ.4445 கோடி வழங்கவும், மேகதாது திட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினோம்." என தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, "டிடிவி தினகரன் சந்திப்பு குறித்த விவகாரத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விரிவாக விளக்கம் அளித்துவிட்டார். இதற்கு மேல் அதைப் பற்றி பேச ஒன்றுமில்லை. காகிதத்தில் கொடுக்கும் புகாருக்கெல்லாம் அமைச்சரவை ராஜினாமா செய்ய வேண்டுமென்றால், இந்தியாவில் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டியதுதான்" என்றார்.
Read More: பிரதமர் மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு: தம்பிதுரை, ஜெயகுமார் உடன் சென்றனர்
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர், "இன்னும் தேர்தல் தேதியே அறிவிக்கவில்லை. அதற்கு பிறகே கூட்டணி குறித்து அதிமுக முடிவு செய்யும்" என்றார்.