CM edappadi palanisamy introduced 50 high speed vehicles to contain covid19 spread : கொரோனா நோய் தொற்று இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் படு வேகமாக கொரோனா வைரஸ் பரவி வந்தது. இதனை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு 19 நாட்களுக்கு ஊரடங்கினை அமல்படுத்தியது மாநில அரசு. இந்நிலையில் நேற்று முதல் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் இப்பகுதியில் கொரோனா நோய் தொற்றினை முடிவுக்கு கொண்டு வர கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது மாநில அரசு. அதன் ஒரு பகுதியாக துரித செயல் வாகனங்கள் 50-ஐ இன்று அறிமுகம் செய்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
சேவைகளை அறிமுகப்படுத்தும் வகையில் 7 வாகனங்களுக்கு தலைமை செயலகத்தில் பச்சைக் கொடி ஆட்டி துவங்கி வைத்தார் முதல்வர்.
இந்நிகழ்வில் தலைமைச் செயலாளர் சண்முகம், உள்துறை செயலாளர் பிரபாகர், டிஜிபி திரிபாதி, சைலேந்திர பாபு மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். இந்த துரித வாகன சேவைக்காக ரூ. 3 கோடியே 90 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மிகவும் குறுகலான பாதைகளிலும் கூட கிருமி நாசினியை தெளிக்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தடுப்பு பணிகள் முடிவுக்கு வரும் பட்சத்தில் குறுகிய சாலைகளில் அமைந்திருக்கும் வீடுகள் மற்றும் கட்டிடகங்களில் ஏற்படும் தீயை அணைக்க இது பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil