மலையேறியவர்கள் முறைப்படி அனுமதி பெறவில்லை - ஆறுதல் சொன்ன பின் முதல்வர் பழனிசாமி!

கோடை காலத்தில் மலையேற்றம் செல்வது அனுமதிக்கப்பட மாட்டாது

குரங்கணி, தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கிராமம். இங்கிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற ஐ.டி. நிறுவன ஊழியர்கள் உள்பட இரு குழுவினர் காட்டுத் தீயில் சிக்கினர். மார்ச் 11-ம் தேதி மாலையில் இந்தத் தகவல் தெரிந்ததும் மீட்புப் பணிக்கு விமானப் படை அனுப்பி வைக்கப்பட்டது.

இரு அணிகளாக சென்ற 39 நபா்களை மீட்கும் பணியில் உள்ளூா் பொதுமக்கள், வனத்துறையினா், தீயணைப்பு வீரா்கள், காவல் துறையினா் ஈடுபட்டுள்ளனா். இந்த விபத்தில் 9 பேர் பலியானதாக இன்று காலையில் தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ் அறிவித்தார். மேலும் பலர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில், சென்னை வேளச்சேரியை சேர்ந்த நிஷா என்பவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 10-ஆக உயர்ந்தது. இதைத் தொடர்ந்து, உயிரிழந்த பத்து நபர்களின் குடும்பத்திற்கு தலா நான்கு லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 50,000/- ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

இந்தச் சூழ்நிலையில், குரங்கணி காட்டுத்தீயில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து முதலமைச்சர் பழனிசாமி ஆறுதல் கூறினார். அவருடன், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு ஆகியோரும் உடனிருந்தனர்.

இதன்பின் பேசிய முதல்வர் பழனிசாமி, “மலையேற்றம் சென்றவர்கள் வனத்துறையிடம் அனுமதி பெறவில்லை. கோடை காலத்தில் மலையேற்றம் செல்வது அனுமதிக்கப்பட மாட்டாது” என்றார். தொடர்ந்து பேசிய துணை முதல்வர் பன்னீர் செல்வம், “இரு வழிகளில் டிரெக்கிங் செல்லலாம். ஒன்று வனத்துறையின் அனுமதியோடு… மற்றொன்று அனுமதி இல்லாமல்… அவர்கள் அனைவரும் அனுமதி இல்லாமலே, டிரெக்கிங் சென்றுள்ளனர்” என்றார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close