பல்கலைக்கழக மானிய குழுவை கலைக்கக்கூடாது என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடிக்கு, முதல்வர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், "இந்திய உயர்கல்வி ஆணையம் அமைப்பது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வரைவு மசோதா குறித்து மாநிலங்கள் கருத்து தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் தமிழத்தின் கருத்துக்களை தெரிவிக்கும் நோக்கத்துடன் இந்த கடிதத்தை எழுதியுள்ளேன்.
தற்போது செயல்பட்டு வரும் பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு நிர்வாக மற்றும் நிதி அதிகாரம் இருப்பதால் அதுவே போதுமானது என்பது தமிழக அரசின் கருத்து. ஒழுங்குப்படுத்தும் நிர்வாக அதிகாரம் மட்டும் கொண்ட உயர் கல்வி ஆணையம் என்பது தேவையில்லை.
கடந்த 1956-ம் ஆண்டு அமைக்கப்பட்ட பல்கலைக்கழக மானியக்குழு, உயர் கல்வி நிறுவனங்களின் பயற்சி, கற்பித்தல், ஆராய்ச்சி போன்றவற்றை கண்காணித்து அவற்றுக்கு தேவையான நிதியுதவியை சரியான முறையில் வழங்கி வருகிறது. நிதிஒதுக்கீட்டில் வெளி்ப்படை தன்மையுடன், பரிந்துரைகளை ஆய்வு செய்து அதன்படி ஒதுக்கவும், நிராகரிக்கவும் பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது.
ஆனால் அரசு தற்போது திட்டமிட்டு வரும் உயர் கல்வி ஆணையத்திற்கு நிதி அதிகாரம் ஏதுமில்லை. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அல்லது வேறு அமைப்புக்கு அந்த அதிகாரம் வழங்கப்பட உள்ளது. இந்த விஷயத்தில் தமிழக அரசுக்கு ஆட்சேபனைகள் உள்ளன. மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு சரியான முறையில் நடந்து வரும் நிலையில், இந்த அதிகாரம் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் எடுத்துக் கொண்டால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும்.
திட்டங்களுக்கு தற்போது 100 சதவீத தொகையும் பல்கலைக்கழக மானியக்குழுவால் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன் மூலம் திட்டங்களுக்கான ஒதுக்கீடு தொகை 60:40 என்ற அளவில் மத்திய அரசும், தமிழக அரசும் செய்ய வேண்டிய சூழல் உருவாகும்.
எனவே உயர் கல்வி ஆணையம் அமைக்கும் மத்திய அரசின் முடிவை தமிழகம் கடுமையாக எதிர்க்கிறது. பல்கலைக்கழக மானியக்குழு தொடர்ந்து செயல்படும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என முதல்வர் பழனிசாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். .