நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் உயிரிழந்த சுஜித்தின் உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் பழனிசாமி சுஜித்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு அரசு சார்பில் ரூ.10 லட்சமும் அதிமுக சார்பில் ரூ.10 லட்சமும் நிவாரணம் அறிவித்தார்.
மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 2வயது குழந்தை சுஜித் 80 மணி நேர மீட்புப் பணி போராட்டத்துக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டான். இதையடுத்து, தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நடுக்காட்டுப்பட்டிக்கு நேரில் சென்று சுஜித்தின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். பின்னர், முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் குழந்தை சுஜித்தின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள். அவர்களுடன் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: “சுஜித் வில்சன் சிறுவன் வெள்ளிக்கிழமை மாலை தோட்டத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துவிட்டார். அது பற்றி அவருடைய வீட்டினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. இது குறித்து அரசுக்கு தகவல் தெரிந்தவுடன் அமைச்சர்களை விரைந்து சென்று மீட்பு பணியை மேற்கொள்ள ஆலோசனை வழங்கினேன். அதன் பேரில் வருவாய்த்துறை அமைச்சர் உதகுமார், நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் வளர்மதி, வருவாய்த்துறை ஆணையர் உள்ளிட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
தனியார் நிறுவனம் எல் அண்ட் டி-யின் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி எப்படியாவது சிறுவனை மீட்டுவிட வேண்டும் என்று விடா முயற்சி செய்தோம். இருந்தாலும், முயற்சி பலனளிக்கவில்லை.
அரசைப் பொறுத்தவரை எல்லா வகையிலும் செயல்பட்டது. இதற்கு உதவிகரமாக என்.டி.ஆர்.எஃப், எஸ்.டி.ஆர்.எஃப், காவல்துறையைச் சேர்ந்த 200 காவலர்கள், தீயணைப்புத்துறையைச் சேர்ந்த 200 வீரர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், பொப்பணித்துறை, நல்வாழ்வுத்துறை, உள்ளாட்சித்துறை அதிகாரிகள், உள்ளிட்ட பல துறை அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டனர்.
கடந்த காலங்களிலும் ஆழ்துளைக் கிணறுகளில் சிறுவர்கள் விழுந்து மீட்பு பணிகள் நடைபெற்றன. அப்போது இவ்வளவு தொழில்நுட்பங்களுன் மீட்பு பணிகள் நடைபெறவில்லை. இந்த முறை சிறுவனை உயிருடன் மீட்க வேண்டும் என்ற எண்ணத்தில் இவ்வளவு மீட்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. அதுமட்டுமில்லாமல், துணை முதல்வர் மீட்பு பணி நடைபெற்ற இடத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்து மீட்பு பணிகள் பற்றி என்னிடம் தெரிவித்தார்.
அரசைப் பொறுத்தவரை சுஜித்தை உயிருடன் மீட்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் நாங்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றினோம்.
இன்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டதால்தான் சிறுவனை உயிருடன் மீட்கமுடியவில்லை என்று தவறான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். ராணுவத்தை வரவழைத்திருக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்.
இதே போலத்தான் முக்கொம்பு அணை உடைந்தபோது ராணுவத்தை வரவழைத்திருக்கலாம் என்று ஸ்டாலின் கூறினார். ஆனால், ராணுவத்தினர்களே தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை சரியானது என்று கூறினார்கள்.
திமுக ஆட்சியில் 22.2.2009 அன்று தேனி மாவட்டம், தோப்புப்பட்டி கிராமத்தில் ராஜதானி அருகே மாயி இருளன் என்ற 6 வயது சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்தான்.
நாங்கள் இப்போது இவ்வளவு தொழில்நுட்பத்தை வைத்து குழந்தையை உயிருடன் மீட்டுவிட வெண்டும் என்று மீட்பு பணிகளை மேற்கொண்டோம். ஆனால், அப்போது எந்தவித தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தாமல் அவர்கள் அந்த சிறுவனை இறந்த நிலையில்தான் மீட்டார்கள். அப்போது இவ்வளவு பேர்களை மீட்பு பணியில் ஈடுபடுத்தினார்களா என்று கேள்வி எழுப்புகிறேன்.
மு.க.ஸ்டாலின் அரசைக் குறை கூற வேண்டும் என்பதற்காகவே மெத்தனமாக தவறான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். எல்லாம் தெரிந்த விஞ்ஞானி போல் பேசுகிறார். திமுக ஆட்சியில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றபோது நேரில் சென்று பார்த்தாரா?
சுஜித்தை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்கப்படும். அதே போல, அதிமுக சார்பில் இருந்து ரூ.10 லட்சம் வழங்கப்படும். சிறுவனை இழந்துவாடும் பெற்றோர்களுக்கும் குடும்பத்தினருக்கும் தமிழக அரசு சார்பில் ஆழ்ந்த வருத்தத்தையும் வேதனையையும் தெரிவித்துக்கொள்கிறோம்.” என்று கூறினார்.
செய்தியாளர்கள் போர்வெல் சட்டத்தை அமல்படுத்தாததுதான் ஆழ்துளை கிணற்றில் சுஜித் உயிரிழந்ததற்கு காரணமா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த முதல்வர் பழனிசாமி, “சட்டத்தை அமல்படுத்தாதது காரணம் இல்லை. இந்த ஆழ்துளை தோட்டத்தில் இருப்பதால் அவர்கள் தெரிவித்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும். ஜெயலலிதா இருந்தபோது பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகளை மூடவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்” என்று கூறினார்.